Thursday, April 25, 2024
Home » காசா அகதி முகாம் மீதான தாக்குதலில் 38 பேர் பலி: தொடர்ந்தும் குண்டு மழை

காசா அகதி முகாம் மீதான தாக்குதலில் 38 பேர் பலி: தொடர்ந்தும் குண்டு மழை

போர் நிறுத்த அழைப்பும் நிராகரிப்பு

by damith
November 6, 2023 6:48 am 0 comment

இஸ்ரேல் மற்றும் காசா போர் ஒரு மாதத்தை எட்டும் நிலையில் இஸ்ரேலின் காசா மீதான உக்கிர தாக்குதல்கள் நீடித்து வருவதோடு அகதி முகாம் ஒன்றின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்து 38 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் ஒன்றுக்கு அரபு உலகம் அழைப்பு விடுத்தபோதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதனை நிராகரித்துள்ளன.

காசாவில் உயிரிழப்பு பத்தாயிரத்தை நெருங்கி இருக்கும் நிலையில் உலகெங்கும் பலஸ்தீன ஆதரவு அர்ப்பாட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன.

இதன்படி காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 9,770 ஆக அதிகரித்திருப்பதோடு 26,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 4,880 சிறுவர்கள் அடங்குகின்றனர்.

இதில் இஸ்ரேல் நேற்றும் (05) வான், தரை மற்றும் கடல் மார்க்கமான காசா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்தது. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் மகாசி அகதி முகாமில் பல வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய காசாவில் இருக்கும் இந்த அகதி முகாமில் இடிபாடுகளில் உயிர்தப்பியோரை மீட்பாளர்கள் தேடி வரும் காட்சிகளை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒருவர் அழுதபடி இருப்பதும் மற்றவர்கள் அவரை அணைத்து ஆறுதல் கூறுவதம் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் தனது நான்கு குழந்தைகள், தனது சகோதரர்கள் நால்வர் மற்றும் அவர்களின் குழந்தைகள் கொல்லப்பட்டதாக துருக்கியின் அனடொலு செய்தி நிறுவனத்தின் புகைப்படப்பிடிப்பாளர் முஹமது அல் அலூல் குறிப்பிட்டார்.

‘மகாசி குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பலர் உயிர்த்தியாகம் செய்து மேலும் பலர் காயமடைந்திருப்பதாக செய்தி கிடைத்தபோது நான் எனது வேலையில் இருந்தேன். மெல்ல மெல்ல வந்த செய்திகளில் எனது மகள் காயமடைந்திருப்பதாகவும் மகன் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது’ என்று அலூல் குறிப்பிட்டார்.

‘நான் மருத்துவமனைக்கு வந்தபோது எனது ஒரே மகள் உட்பட நான்கு குழந்தைகளும் கொல்லப்பட்டிருப்பதை பார்த்தேன்’ என்றார்.

மகாசி அகதி முகாம் மீதான இந்தத் தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டு 100 பேர் வரை காயமடைந்ததாக காசாவின் ஹமாஸ் அரசின் ஊடக அதிகாரி சலாமா மாரூப் தெரிவித்தார். இதில் பலரும் காணாமல்போயிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காசாவின் தால் அல் ஹவா பகுதியில் இருக்கும் அல் குத்ஸ் மருத்துவமனைக்கு அருகில் கடும் வான் தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த முயற்சி

ஜோர்தான் தலைநகர் அம்மானில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கனை கடந்த சனிக்கிழமை (04) சந்தித்த கட்டார், சவூதி, எகிப்து, ஜோர்தான் வெளியுறவு அமைச்சர்கள் இஸ்ரேலை போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கச் செய்யும்படி அழுத்தம் கொடுத்தனர்.

‘இந்தப் போர் பலஸ்தீனர்கள், இஸ்ரேலியர்களுக்கு மேலும் வேதனையையே தருவதோடு இது நம்மை வெறுப்பு மற்றும் மனிதாபிமானமற்ற படுகுழிக்கே தள்ளப்போகிறது’ என்று ஜேர்தான் வெளியுறவு அமைச்சர் ஐமன் சபாதி, பிளிங்களுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ‘எனவே, இதனை நிறுத்த வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்த பிளிங்கன், அது ஹமாஸுக்கு மாத்திரமே நன்மை தரும் என்றும் அது அவர்கள் தம்மை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும் தாக்குதல்களை நடத்துவதற்கும் உதவும் என்றும் குறிப்பிட்டார்.

எனினும் உதவிகள் செல்வதற்கும் சன நெரிசல் மிக்க பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கும் உதவும் வகையில் உள்ளூர் மட்டத்தினால் சண்டை நிறுத்தம் ஒன்றையே அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை டெல் அவிவிவில் பிளிங்கனை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த பரிந்துரையை நிராகரித்திருந்தார்.

பிளிங்கன் நேற்று பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்ததோடு இன்று துருக்கி செல்கிறார். பிளிங்கனை சந்தித்த அப்பசும் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் பேசிய ஈரான் முதல் துணை ஜனாதிபதி முஹமது மக்பர், இஸ்ரேலின் செயலை ‘போர் குற்றம்’ என்று கூறியதோடு, ‘இதனை நாம் உடன் நிறுத்தி காசாவுக்கு மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும்’ என்றார்.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் மற்றும் காசா மீதான முற்றுகை அந்த குறுகலான நிலப் பகுதியில் பாரிய மனிதாபிமான அவலத்தை ஏற்படுத்தி உள்ளது சர்வதேச அளவில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் லண்டன், பெர்லின், பாரிஸ், ஸ்தான்பூல், ஜகார்த்தா மற்றும் வொஷிங்டன் நகரங்களில் கடந்த சனிக்கிழமையும் இடம்பெற்றன.

இதில் வொஷிங்டன் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி ஜோ பைடனின் போர் கொள்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டதோடு போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தனர்.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில் இடம்பெற்ற பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானவர்கள் முன் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரட்னோ மர்சுதி, பலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்குவதாகவும் இரண்டாவது உதவிக் கப்பல் அனுப்பப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மேற்குக் கரை

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறைகள் மோசமடைந்துள்ளன. இது இந்தப் போரின் மூன்றாவது முனையாக மாறியுள்ளது. இதில் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் மற்றொரு முனை மோதலாக லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

ஜெரூசலத்திற்கு அருகில் இருக்கும் அபூ திஸ் என்ற கிராமத்தில் இஸ்ரேல் சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்தி பலரை கைது செய்த நிலையில் சிலரை சுட்டுக் கொன்றது.

இந்த சம்பவத்தில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேற்குக் கரையின் ஹெப்ரூன் நகரில் நேற்று மேலும் ஒரு பலஸ்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காசாவில் போர் வெடிப்பதற்கு முன்னரே மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்திருந்ததோடு கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு பலஸ்தீனர்களின் உயிரிழப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,100 பேர் காயமடைந்திருப்பதோடு பல நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய குடியேறிகளின் தினசரி தாக்குதல்களும் அங்கு அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

தரைவழிப் போர்

இஸ்ரேலியப் படை காசா நகரை சுற்றிவளைத்ததாக கூறியபோதும் பலஸ்தீன போராளிகளின் கடும் எதிர்ப்பை அது சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் காசாவின் மிகப் பெரிய நகரில் இஸ்ரேல் நேற்று வானில் இருந்து வீசிய துண்டுப் பிரசுரத்தில் அங்குள்ள மக்கள் சாலாஹ் அல் தீன் வீதி ஊடாக தெற்கை நோக்கி செல்லும்படி கூறப்பட்டிருந்தது. ‘உங்களது உயிரை பாதுகாத்து வீடுகளை விட்டு சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுங்கள்’ என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.

வடக்கு காசாவில் இருந்து ஏற்கனவே தெற்கை நோக்கி 800,000 தொடக்கம் ஒரு மில்லியன் பேர் வெளியேறி இருப்பதாகவும் 350,000 தொடக்கம் 400,000 பேர் வரை காசா நகரில் தொடர்ந்து தங்கி இருப்பதாகவும் அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் டேவிட் ஸ்பீல்ட் தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் 1.5 மில்லியன் பேர் அந்தப் பகுதிக்குள்ளேயே இடம்பெயர்திருப்பதாக ஐ.நா கணித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு அமைச்சரவை பொறுப்பிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

காசா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் என எலியாஹு தெரிவித்திருந்த நிலையில், அவரை இடைநீக்கம் செய்து இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அமிஹாய் எலியாஹு பேச்சுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சரவையிலிருந்து எலியாஹு நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், அமைச்சர் அமிஹாய் எலியாஹுவின் பேச்சு உண்மைக்கு புறம்பாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச சட்டத்தின்படி செயல்படுகின்றன. நாங்கள் வெற்றி பெறும் வரை இதனைத் தொடர்வோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT