Friday, April 19, 2024
Home » இலங்கை கிரிக்கெட்டுக்கு அர்ஜுன தலைமையில் இடைக்கால குழு

இலங்கை கிரிக்கெட்டுக்கு அர்ஜுன தலைமையில் இடைக்கால குழு

- 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளடக்கம் 

by Rizwan Segu Mohideen
November 6, 2023 7:39 am 0 comment

– விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சர் எனும் வகையில் ரொஷான் ரணசிங்கவிற்கு உள்ள 1979ஆம் ஆண்டு விளையாட்டு சட்டம் இலக்கம் 25 இன் கீழுள்ள அதிகாரத்தின் பிரகாரம் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குறித்த குழு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க்பட்டுள்ளது.

  1. எஸ்.ஐ. இமாம் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
  2. ரோஹிணி மாரசிங்க – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
  3. கௌரவ. ஐராங்கனி பெரேரா – ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி
  4. அர்ஜுன ரணதுங்க (தலைவர்)
  5. உபாலி தர்மதாச
  6. ரகித ராஜபக்ஷ – சட்டத்தரணி
  7. ஹிஷாம் ஜமால்தீன்

அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று நியமிக்கப்பட்ட புதிய இடைக்காலக் குழு செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிப்பதற்கான இடைக்கால நடவடிக்கை ஒன்று தொடர்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முழு அங்கத்துவ நாடுகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுத்தி இருக்கும் அமைச்சர், இலங்கை கிரிக்கெட் தொடர்பில் அண்மைய சர்ச்சைகள் பற்றி விளக்கியுள்ளார்.

“2015 தொடக்கம் இலங்கை கிரிக்கெட்டின் தரம் சர்வதேச மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் படிப்படியாக குறைந்துள்ளது. வீரர்களின் ஒழுக்காற்று விவகாரம், நிர்வாகத்தின் ஊழல், நிதி முறைகேடு மற்றும் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகளால் இலங்கை கிரிக்கெட் முடங்கியுள்ளது.

நாட்டின விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் அனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் ஊழலுக்கு எதிராக போராடுவதும் நல்லாட்சி மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் எனது ஒரே பொறுப்பாகும்” என்று அமைச்சர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் எதிர்காலத்தில் இடைக்கால நடவடிக்கை ஒன்றை எடுப்பது தொடர்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“இந்த சூழலில், நல்லாட்சி அடிப்படைகளை நிறுவுவதற்கு, சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது மற்றும் நாம் அனைவரும் விரும்பும் விளையாட்டின் ஒழுக்கம் மற்றும் உயிரோட்டத்தை மேம்படுத்துவதற்கு மாத்திரம் இடைக்கால நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சோபிக்கத் தவறி இருப்பதோடு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை மீதான விமர்சனங்கள் வலுத்துள்ளன. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை பதவி விலகும்படி விளையாட்டுத் துறை அமைச்சர் நேராக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் மொஹான் டி சில்வா கடந்த சனிக்கிழமை (04) பதவி விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT