கடன் சுமையால் மங்கிப்போகும் பொருளாதார வளர்ச்சி | தினகரன்

கடன் சுமையால் மங்கிப்போகும் பொருளாதார வளர்ச்சி

நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார நிலைமைகள் தொடர்பாக பல்வேறு மட்டத்திலும் வெவ்வேறு விதமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்கத் தூண்டுவனவாகவே அமைந்துள்ளது. அதிலும் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுவருவதாக எதிர்த்தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை அவர் முற்றுமுழுதாக நிராகரித்திருக்கிறார். எந்தவிதத்திலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை எனவும் 2015ல் நல்லாட்சி அரசு பதவிக்கு வரும்போது காணப்பட்ட பொருளாதார வீழ்ச்சியை கடந்த மூன்றாண்டுகளுக்கிடையே மிகுந்த சிரமத்துடன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பொருளாதாரத்தை நிலையான தன்மையுடன் பேணி வரு முடிகின்ற போதும் நாட்டின் கடன் சுமையிலிருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுக்கும்வரை கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையாக தேசத்தின் பொருளாதார வளத்தை நோக்குகின்ற போது கடன் சுமையிலிருந்து விடுபடும் வரை பொதுவானதொரு தளம்பல் நிலை காணப்படுவது தவிர்க்க முடியாது. யார் எந்த விதமாக விமர்சிக்கின்ற போதும் பாரியதொரு கடன் சுமைக்குள் சிக்கியுள்ள நாட்டை அதிலிருந்து மீட்டெடுப்பதில் அரசாங்கம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளதை எவராலும் மறுத்துரைக்க முடியாது.

பலத்த நெருக்கடிக்கு மத்தியிலும் சர்வதேசத்துக்கு அளித்த உறுதிமொழிக்கமைய கணிசமான கடனை திருப்பிச் செலுத்துவதில் அரசு வெற்றிகண்டுள்ளது. இப்போது மீதமுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கால எல்லை வகுத்துக்கொணடு சர்வதேசத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 2020க்கும் 2025 க்கும் இடைப்பட்ட காலத்தில் முழுக் கடனையும் திருப்பிச் செலுத்த இலகுமுறையொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதொன்றாகும். முதலில் நாடு கடன் சுமையிலிருந்து விடுபட வேண்டும். அதனைச் செய்வதற்கு, அதற்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவுக்கு பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும. முதல் கட்டத்தில் அரசு வெற்றிகண்டுள்ளது. இனி அடுத்த கட்டப் பயணம் தொடரப்பட வேண்டியுள்ளது.

நாம் தேசிய பொருளாதாரத்தில் மேம்பாடடைய வேண்டுமானால் கட்டாயமாக தேசிய உற்பத்தியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். தேசிய உற்பத்தி விடயத்தில் தனியானதொரு கொள்கை வகு்ததுக்கொளவ்தன் மூலமே இது சாத்தியப்பட முடியும். நாடு அபிவிருத்தி முன்னெற்றமடைய வேண்டுமானால் எமது நாடடு வளங்கள் உரியமுறையில் முகாமைத்துவப்படுத்திக்கொள்வது இன்றியமையாததாகும். உள்நாட்டு வளங்களை சரியான முறையில் வகைப்படுத்தி அதற்கேற்ற விதத்தில் முதலீடுகளை மேற்கொள்ளப்பட்டால் தான் உரிய பயனை அடைந்து கொள்ள முடியும்.

வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு அவசியம் என்ற போதும் அதேசமயம் தேசிய உற்பத்தியிலும் உள்ளூர் கைத்தொழிலையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் எம்மில் தங்கியிருப்பதை மறந்து விடக்கூடாது. உள்ளுர் கைத்தொழில் முயற்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வெளிநாட்டு முதலீடுகள் குறித்து நாம் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். அதேசமயம் எமது உள்நாட்டு உற்பத்திகள் சர்வதேச சந்தையில் உன்னத நிலையை எட்டக்கூடிய விதத்தில் உற்ப்தித் தரத்தை பேண வேண்டியது மிகமுக்கியமானதாகும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடன் சுமை, அபிவிருத்தி என்பனற்றை கவனத்தில் கொள்வது போன்று மற்றொரு விடயத்தையும் மனதில் கொள்ளவேண்டும். அதுதான் நாட்டை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டெடுப்பதாகும். வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு வெறும் நிவாரண உதவிகளை வழங்கினால் மட்டும் போதாது. நிவாரணம் என்பது தற்காலிக ஏற்பாடாகும். அதனை நிரந்தரமாக வழங்கிக்கொண்டிருக்க முடியாது. மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டெடுப்பதற்கு அவர்கள் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடக்கூடிய வித்தில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவசியமானால் அதனைக் கட்டாயப்படுத்துவதிலும் தப்பில்லை எனலாம்.

தோட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காடடியிருக்கிறார். இது மிக முக்கியமானதொன்றாகும். மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தினால் அது நல்ல பயனளிக்கக்கூடியதாக இருக்கும். மலையகத்தின் இன்றைய நிலையில் கைத்தொழில் முயற்சிகளுக்குச் சமாந்தரமாக உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்க முடிந்தால் மலையகம் எழுச்சிபெற முடியும் என நம்பலாம். ஏனெனில் நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரும் சுதந்திரமடைந்த பின்னரும் தோடப் பொருளாதாரம்தான் இலங்கையின் அபிவிருத்தியில் ஆணிவேராக அமைந்து காணப்படுகிறது.

அண்மைக் காலமாக தோட்டப் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகின்றது. கடந்த காலத்தில் தோட்டப் பொருளாதாரத்தில் உரிய கவனம் செலுத்தப்படாமை காரணமாகவே அது வளர்ச்சிகாணவில்லை. இலாபமீட்டுவதை மட்டும்கருத்திலெடுத்தார்களே தவிர அதன் வளர்ச்சி விடயத்தில் உரிய அக்கறை காட்ட உரிய தரப்பினர்கள் தவறியுள்ளனர். இந்த நிலையில்தான் இன்றைய அரசு தோட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்த தனியான திட்டம் வகுத்துச் செயற்பட முடிவுசெய்துள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும்.

மற்றொரு புறத்தில் வடக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் வடக்கின் பொருளாதாரக் கட்டமைப்பு முற்றுமுழுதாக வீழ்ச்சி கண்டது. வடக்கில் யுத்தம் காரணமாக அந்த மண் முழுமையாக அழிவுக்குள் நசுங்கிப் போயிருந்தது. வடக்கை ஆரம்பத்திலிருந்தே கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அங்கு ஒரு பெரிய இடைவெளி காணப்படுகிறது. அங்கு பொருளாதார வளத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கும் மனித வளங்கள் மீளத்திருப்பியழைக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். அங்கு உடைந்து போயுள்ள சமுகக்கட்டமைப்பை சீர்படுத்தி உயிர்ப்பிக்க வேண்டியது அவசியமானதாகும்.

நாட்டின் பொருளாதாரம் உரிய முறையில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமானால் முதலில் நாட்டில் சகவாழ்வும், நல்லிணக்கமும் உறுதிசெய்ய்பபட வேண்டிய மிக பிரதானமானதொன்றாகும். மக்கள் இன, மத, மொழி ரீதியில் பிளவுபட்டு பிரிந்து நிற்கும் போது நாட்டை அபிவிருத்தியடையச் செய்வதென்பது இயலாத காரியமாகும். உள்ளங்கள் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக வாழும் நிலை ஏற்படாத வரை நாட்டை முன்னேற்றுவது கடினமானதாகும். நாட்டில் சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட முன்வரவேண்டும். பொருளாதார அபிவிருத்தியும், ஒழுக்கப் பண்பாடுகளும், நல்லிணக்கமும் ஒருசேரக் கைகோர்ப்பதன் மூலமே தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டியது மிக அவசியமானதாகும்.


Add new comment

Or log in with...