Friday, March 29, 2024
Home » காற்று மாசு தீவிரம்: பங்களாதேஷுடனான இலங்கையின் இன்றைய போட்டி சந்தேகம்

காற்று மாசு தீவிரம்: பங்களாதேஷுடனான இலங்கையின் இன்றைய போட்டி சந்தேகம்

by damith
November 6, 2023 9:48 am 0 comment

டெல்லியின் காற்று மாசு மோசமடைந்திருக்கும் நிலையில் இன்று (06) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான உலகக் கிண்ண லீக் ஆட்டம் நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

டெல்லி, அருன் ஜெட்லி மைதானத்திலேயே இன்றைய போட்டி நடைபெறவுள்ளது. எனினும் காற்று மாசு காரணமாக ஏற்கனவே இரு அணிகளும் தமது பயிற்சிகளை ரத்துச் செய்துள்ளன. இலங்கை உள்ளக அரங்கில் பயிற்சிகளை மேற்கொண்டதோடு பங்களாதேஷ் அணி கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியை ரத்துச் செய்து சனிக்கிழமை மாலை மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டபோதும் பல வீரர்களும் அசௌகரியத்தை சந்தித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் காற்றின் தரக் குறியீடு 400க்கும் மேல் இருந்து வருகிறது. இந்த நிலை நாளை செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் டெல்லியில் பாடசாலைகளுக்கு இரு தினம் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதோடு வாகனப் போக்குவரத்து மற்றும் கட்டுமான வேலைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் போட்டி தினமான இன்று போட்டி அதிகாரிகளால் காற்றின் தரம் பற்றி மதிப்பீடு செய்த பின் போட்டியை வேறொரு தினத்தில் வைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காற்றுத் தரக் குறியீடு 200க்கு குறைவாக இருந்தாலே போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனினும் நேற்றைய தினத்திலும் அங்கு காற்றுத் தரம் 457 ஆக இருந்தது என இந்தியாவின் மத்திய மாசு கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் கடந்த காலங்களில் இவ்வாறான சூழலை எதிர்கொண்டுள்ளன. 2017 இல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது காற்று மாசு காரணமாக இலங்கை வீரர்கள் முகக் கவசம் அணிந்தே போட்டியில் ஆட வேண்டி ஏற்பட்டதோடு 2019 டி20 போட்டிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களும் இதே நெருக்கடியை சந்தித்தனர்.

அப்போது இலங்கை வீரர்கள் பலரும் மூச்சுவிட சிரமப்பட்டதோடு, சில வீரர்கள் மைதானத்திலும், உடைமாற்றும் அறையிலும் வாந்தி எடுத்தனர்.

இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி ஏற்கனவே வெளியேறி இருப்பதோடு இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறும் சாத்தியம் மிகக் குறைவு என்ற நிலையிலேயே இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது.

எனினும் தற்போது உலகக் கிண்ணப் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி 2025 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற முதல் எட்டு இடங்களுக்கு நீடிப்பது கட்டாயமாகும்.

இலங்கை அணி தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமாயின் எஞ்சிய இரண்டு போட்டிகளையும் வெற்றியீட்டி 8 புள்ளிகளை பெற வேண்டும் என்பது மாத்திரமல்ல, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தனது எஞ்சிய போட்டிகளில் தோல்வியை சந்திக்க வேண்டும். இதன்போது கூடிய நிகர ஓட்ட விகிதத்தை பெற்றிருந்தால் இலங்கையால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT