தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குகளை கவரும் முயற்சிகள்! | தினகரன்

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குகளை கவரும் முயற்சிகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் சில தினங்கள்தான் உள்ளன. இவ்வாறான நிலையில் தேர்தல்கள் களம் கொதிநிலையை அடைந்திருக்கின்றது. ஆனால் இது ஜனாதிபதியையோ, பிரதமரையோ, அரசாங்கத்தையோ மாற்றுவதற்கான தேர்தல் அல்ல. மாறாக கிராம மட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுப்பதற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலே இது என்பதை ஒவ்வொருவரும் முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

அதேநேரம், இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் களமிறங்கியுள்ள அபேட்சகர்கள் வெற்றி பெறுவதையே இலக்காகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில் ஏற்கனவே நடைமுறையிலிரு-ந்த விகிதாசாரத் தேர்தல் முறைமைதான் அரசியல் அதிகாரம் என்பது மக்கள் சேவைக்கு அப்பால் செல்வாக்கையும் செல்வத்தையும் தேடித் தரக்கூடியது என்ற பார்வையை தோற்றுவித்தது. அதனால் இது அதிக செலவு மிக்க தேர்தலாக அமைந்ததோடு கட்சிகளுக்கு உள்ளேயே விருப்பு வாக்கு சண்டைகளும் முரண்பாடுகளும் இடம்பெறக் கூடியவையாகவும் அமைந்தன. அதிலும் இத்தேர்தல் முறைமையில் காணப்பட்ட விருப்புவாக்கு முறைமை இதற்கு பக்கத் துணையாகியது.

அதனால் கடந்த காலத்தில் உள்ளூராட்சி மன்றத்தின் அதிகார எல்லை முழுவதும் வாக்கு வேட்டையில் ஈடுபடக் கூடிய நிலைமை ஏற்பட்டிருந்து. அதாவது செல்வ வசதிபடைத்தவர்களே தேர்தலில் போட்டியிட முடியும். அவர்களே மக்கள் பிரதிநிதிகளாகலாம் என்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது.

அரசியல் அதிகாரத்தின் சுவையை உணர்ந்து கொண்டவர்கள் தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணாக கையூட்டுக்களையும், அன்பளிப்புக்களையும் வழங்கி வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாகினர். கடந்த காலத்தில் பிழையான வழியில் மக்கள் பிரதிநிதிகளாகியதன் விளைவாக பல உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடி மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்தன.

இதன் விளைவாக பலர் அதிகார துஷ்பிரயோகம் லஞ்ச, ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உளளானதோடு சிலர் தேர்தலில் போட்டியிட முடியாதபடி நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுள்ளனர். சிறைத்தண்டணை அனுபவித்தவர்களும் உள்ளனர்.

இவ்வாறு அடிமட்டத்தில் ஊழல் மோசடிக் கலாசாரத்திற்கு பெரிதும் வழிசமைத்த விகிதாசார தேர்தல் முறைமையை இணக்கப்பாட்டு அரசாங்கம் மறுசீரமைத்துள்ளது. இதனூடாக விருப்பு வாக்கு முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய தேர்தல் முறைமையின் கீழ் வட்டார முறைமைப்படி 60 வீதமான பிரதிநிதிகளும், விகிதாசார முறைப்படி 40 வீதமான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இத்தேர்தல் முறைமையின் கீழ் ஒவ்வொரு தேர்தல் வட்டாரத்திற்கும் பொறுப்பாக ஒரு மக்கள் பிதிநிதி கிடைக்கப் பெறப் போகின்றார்.

அவர் வட்டார மக்களுக்கு வகை சொல்லக் கூடியவராகஇருப்பார். இது அதிக செலவை ஏற்படுத்தாத தேர்தலும் கூட. தாம் போட்டியிடும் வட்டாரத்திற்குள்ளேளேயே வாக்குகளைத் தேடி வெற்றி பெற வேண்டும். அதாவது வட்டாரத்தில் வாழும் மக்களின் நம்பிக்கையை வென்ற அபேட்சகர்களால்தான் இத்தேர்தலில் இலகுவாக வெற்றி கொள்ளக் கூடியதாக இருக்கும். அவர்கள் மக்களுக்கு கையூட்டுக்களையோ அன்பளிப்புக்களையோ வழங்க வேண்டிய தேவை இராது.

ஆனால் இத்தேர்தலில் களமிறங்கியிலுள்ள பல அபேட்சகர்கள் வட்டாரத்தில் வாழும் மக்களின் நம்பிக்கையை வென்றவர்கள் அல்லர். அவர்கள் அரசியல் அதிகாரத்தின் சுவையை மாத்திரம் அறிந்தவர்கள். அதனால் கடந்த காலத்தைப் போன்று பணத்தைப் பாவித்து அதிகாரத்தை அடையலாம் என நினைக்கின்றனர். ஆனால் இத்தேர்தல் முறைமையின் கீழ் அதனைச் செய்ய முடியாது. ஒருவர் அபேட்சகராகப் போட்டியிடும் வட்டார மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்திரா விட்டால் மக்கள் பிரதிநிதியாக முடியாது.

பணத்தைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதியாக முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு முரணான செயலாக அமைவதோடு அது தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கையும் ஆகும். இது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு பணியில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டிருக்கும் பெப்ரல் அமைப்பு குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.

குறிப்பாக வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் உலர் உணவுப் பொதிகள், பாடசாலைப் பிள்ளைகளை இலக்கு வைத்து அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள், சீருடைத் துணிகள், சீமெந்து பக்கட்டுகள், கூரைத்தகடுகள், குடிநீர் இணைப்புக்கள் எனப் பலவேறுபட்ட கையூட்டுக்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அபேட்சகர்களாலும் அவர்களது அனுசரணையாளர்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன.இச்செயற்பாடு மாத்தளை மாவட்டத்தில் அதிகளவில் இடம்பெறுகின்றது என்று அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அது தான் உண்மையும் கூட.

இவ்வாறு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதை உணமையான வெற்றியாகக் கொள்ள முடியாது. அதனால் அபேட்சகர்கள் ஜனநாயகத்தையும், தேர்தல் சட்டங்களையும் மதித்து நடக்க வேண்டும். அதுவே மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

 தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் கையூட்டுக்களை வழங்கி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியம். தமது வட்டாரத்தினதும், தாம் வாழும் நாட்டினதும் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்போடு பங்களிக்கக் கூடியவர்களைத் தம் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய மக்கள் பின்னிற்கக் கூடாது. அதுவே வட்டாரத்தினதும் நாட்டினதும் நிலைபேறான மேம்பாட்டுக்கு பக்கத்துணையாக அமையும்.


Add new comment

Or log in with...