என்னைப் பலப்படுத்துங்கள் | தினகரன்

என்னைப் பலப்படுத்துங்கள்

தேர்தலின் பின் மக்கள் நலன்சார் மாற்றங்கள்
ஐ.தே.க, மஹிந்த தரப்பு வெற்றி பெற்றால் நிலைமை மோசமடையும்

 

 நாட்டை காக்க கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்றுபடுங்கள்
 வரலாற்றில் வெளிநாட்டுக்கு காணி விற்ற முதல் நபர் மஹிந்த

ஐக்கிய தேசிய கட்சியையோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவையோ அன்றி நாட்டு மக்கள் என்னையே (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி) வலுப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

என்னை வலுத்தப்படுத்தினால் தான் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐ.தே.க. வோ ஸ்ரீ.ல.பொ.பெரமுனவோ வெற்றி பெறுமாயின் நாடு மிகவும் மோசமடையக் கூடிய நிலைமை ஏற்படும் என்றும் நாட்டு மக்களுக்கு சேவையாற்றவேயன்றி ஊழல் மோசடிக்காரர்களைப் பாதுகாப்பதற்காகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஊழல், மோசடி மற்றும் துஷ்பிரயோகங்கள் காரணமாகவே இந்நாடு மிக மோசமான நிலையை அடைந்திருக்கின்றது.

இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக நாட்டின் மீது உண்மையான அன்பு கொண்டவர்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படக் கூடியவர்களும் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் அவசியத் தேவை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவர்கள் என்னை விமர்சிப்பதோடு அதிதிகள் கூட்டணியை அமைத்து செயற்படவும் தொடங்கி விட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

பிணைமுறி அறிக்கை தொடர்பாக நான் விடுத்த சவால் காரணமாக அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் அதனை விவாதிக்க எடுத்துள்ள போதிலும் அந்த குறுகிய நேர கால விவாதத்தின் மூலம் நாட்டு மக்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவர் என்பதில் தெளிவில்லை எனவும் கூறினார். தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நான் அர்ப்பணிப்போடு உள்ளேன். அதற்கு எல்லா தரப்பினரும் இதய சுத்தியோடு முழுமையாக ஒத்துழைப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை வரலாற்றில் இந்நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தையும் எந்தவொரு ஆட்சியாளரும் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி துறைமுக நகருக்காக 240 ஏக்கர் காணியை விற்பனை செய்ததோடு, காலி முகத்திடலில் ஆறு ஏக்கர் காணியை உறுதி வழங்கி ஒரு சர்வதேச தனியார் ஹோட்டலுக்கு விற்பனை செய்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார். அச்சு ஊடங்களுக்கு வழங்கிய விஷேட பேட்டியின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இந்த விஷேட பேட்டியின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட ஜனாதிபதி மேலும் கூறியதாவது, உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய மு-ன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளுடன் கூட்டணியாக போட்டியிடுகின்றது. இத்தேர்தலில் நாட்டு மக்கள் என்னை வலுப்படுத்த வேண்டும். அதன் ஊடாகத் தான் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். இத்தேர்தலின் பின்னர் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ப தேவையான மாற்றங்களைச் செய்யவிருக்கின்றேன். இதன் நிமித்தம் வேலைத்திட்டமொன்றை தயாரிக்கவுள்ளேன்.

நாட்டு மக்களில் முழுமையாக நம்பிக்கை வைத்துத் தான் நாடும் மக்களும் நன்மைகள் பெறும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகள் பெற்றுக் கொடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் இன்றைய சூழலில் என்னைப் பலவீனப்படுத்தினால் நாட்டினதும், மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்படும். இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையோ ஜி.எல். பீரிஸ், மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியோ வெற்றி பெற்றால் நாடு மோசமான பாதையில் இட்டுச் செல்லப்படும் நிலைமை ஏற்படும்.

அத்தோடு இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் தொடர்பாக விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தான் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைத்தன. அரசாங்க பொறுப்புக்களை இரண்டு தரப்பினரும் பகிரந்து கொண்டு அரசாங்கத்தை முன்னெடுக்கின்றோம். அதற்காக ஒரு தரப்பில் இடம்பெறும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான மோசடிகளையும் செயற்பாடுகளையும் கண்டும் பார்த்தும் மௌனமாக இருக்க முடியாது.

கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட ஊழல் மோடிகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே அந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறினேன். அதே நிலைமை இங்கும் தோற்றம் பெற்றால் அதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும். ஊழல் மோசடிகளுக்கு எதிராக நான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். அதே நிலைப்பாட்டில் தான் நான் தொடர்ந்தும் பயணிக்கின்றேன். இவ்வாறான நிலையில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எனது கட்சிக்காரர், எனது ஆதரவாளர், எனது உறவுக்காரர், நண்பர் என்று நான் ஒரு போதும் பார்க்க மாட்டேன்.

அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நான் ஒரு போதும் பின்நிற்க மாட்டேன். எனது சகோதரர் கூட எனது ஆட்சிக்காலத்தில் சிறை சென்றார். அவர் எனது சகோதரர் என்று நான் அவரை விஷேட கண் கொண்டு நோக்கவில்லை. குற்றம், தவறு செய்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் சமமாக நடாத்தப்பட வேண்டும் என்பது தான் எனது கொள்கை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சில படுகொலைகள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தில் நியாயம் கிடைக்குமென பெரிதும் நம்பினார்கள். ஆனால் அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தாமதமாவதற்கு அந்நடவடிக்கைகளை மு-ன்னெடுக்க வேண்டிய நிறுவனங்களை தம் வசம் வைத்திருக்கும் தரப்பினரான ஐ.தே.க வினர் தான் அதற்கு வகை சொல்ல வேண்டும். ஆனால் பிணைமுறி விவகாரம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்று. அதனால் இவ்விடயத்தில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் உச்சபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். இந்த அறிக்கையின் சிபாரிசுகளையும், முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அறிக்கை என்னிடம் கிடைக்கப் பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடனும் உயரதிகாரிகளுடனும் இற்றை வரையும் மூன்று முறை கலந்துரையாடியுள்ளேன்.

அதேநேரம் இவ்விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு அவ்வப்போது கலந்துரையாடுமாறு எனது செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அறிக்கையின் முன்மொழிவுகளுக்கு அமைய லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தில் மூன்று திருத்தங்களை மேற்கொள்ளவென சட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கு அமைச்சரவையில் கடந்த செவ்வாயன்று அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இவை இவ்வாறிருக்க இந்த அறிக்கை கிடைக்கப்பெற முன்னரே ஊழல் மோடிகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளை வலு-ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டேன் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...