Friday, April 26, 2024
Home » ஐ.நா. சபையை மதித்து செயற்பட வேண்டியது இஸ்ரேலின் பொறுப்பு!

ஐ.நா. சபையை மதித்து செயற்பட வேண்டியது இஸ்ரேலின் பொறுப்பு!

by damith
November 6, 2023 6:00 am 0 comment

காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள யுத்தம் நாளையுடன் (07.11.2023) ஒரு மாதத்தை எட்டுகிறது. இக்காலப்பகுதியில் வான், கடல், நிலம் ஆகிய மூன்று மார்க்கங்கள் ஊடாகவும் காஸா மீது கடும் தாக்குதல்கள் முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல்.

இந்த யுத்தம் காரணமாக இற்றை வரையும் காஸாவில் 9,645 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 3,900 பேர் சிறுவர்களாவர். 26,439 பேர் காயமடைந்துள்ளனர். அதேநேரம் இஸ்ரேலில் 1400 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 5,400 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்னர்.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 07 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் இந்த கடும் யுத்தத்தை முன்னெடுத்துள்ளது.

21 இலட்சம் பலஸ்தீன மக்கள் வாழும் 365 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவைக் கொண்ட காஸாவை மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட படையினரையும் நவீன ஆயுதங்களையும் கொண்டு சுற்றிவளைத்துள்ள இஸ்ரேல், காஸாவுக்கான தண்ணீர், மின்சாரம், மருந்துப் பொருட்கள், உணவு விநியோகம் உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்தியுள்ளது.

ஹமாஸ்தான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்காக இஸ்ரேல் முன்னெடுத்துள்ள நடவடிக்கை காஸாவிலுள்ள அனைத்து பலஸ்தீன மக்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்ற தோரணையில் அமைந்துள்ளது.

காஸாவின் மக்கள் குடியிருப்புக்கள், அகதி முகாம்கள், ஐ.நா முகாம்கள், மக்கள் தங்கியிருக்கும் இடங்கள் மாத்திரமல்லாமல் வைத்தியசாலைகள், அம்புலன்ஸ் வண்டிகள், பேக்கரிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மக்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்கும் இடங்களும் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றன. காஸாவின் உட்கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் அழித்து சேதப்படுத்தப்படுகின்றன. அங்கு வசிக்கும் பலஸ்தீன மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர். குடும்பம் குடும்பமாக அழிக்கப்படுகின்றனர்.

காஸா மீதான யுத்தத்தில் சர்வதேச சட்டங்களையோ மனிதாபிமான சட்டங்களையோ இஸ்ரேல் பேணுவதாக இல்லை என உலகத் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காஸாவில் முன்னெடுக்கப்படும் யுத்தத்தின் அழிவுகளும் சேதங்களும் உலக மக்களையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

இந்த நிலையில் அழிவுகர யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி உலகின் பல்வேறு நகர்களிலும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் உட்பட உலகின் பல தலைவர்களும் இக்கோரிக்கையை அடிக்கடி விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒக்டோபர் 27 ஆம் திகதி ஐ.நா. பொதுசபையில், காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி 120 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் ஐ.நா. வில் அங்கம் வகிக்கும் நாடு என்ற வகையில் அந்த தீர்மானத்தை மதித்து செயற்பட ​வேண்டிய பொறுப்பு இஸ்ரேலுக்கு உள்ளது.

ஆன போதிலும் இவை எதனையும் கருத்தில் கொள்ளாது யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இப்போக்கு ஆரோக்கியமானதல்ல. ஐ.நா.வின் நோக்கத்தையும் அதன் எதிர்பார்ப்பையும் கூட இந்தப் போக்கு கேள்விக்குறியாக்கி விடக்கூடிய அச்சுறுத்தல்களைத் தோற்றுவித்துள்ளது. ஐ.நா. சபையானது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணுதல், நாடுகளின் நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான மையமாக இருத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகவே இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிர்காலப் போர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது.

அதற்கு ஏற்ப ஐ.நா. வில் அங்கம் வகிக்கும் எல்லா நாடுகளும் ஐ.நா. வின் கொள்கை, கோட்பாடுகளையும் தீர்மானங்களையும் பிரகடனங்களையும் மதித்து செயற்படுகின்றன.

ஆனால் இஸ்ரேல் ஐ.நா.வில் அங்கம் வகித்த போதிலும் ஐ.நா.வின் கோரிக்கைகளையோ தீர்மானங்களையோ மதித்து செயற்படாத நிலையை எடுத்திருக்கிறது. காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் ஐ.நா. செயலாளர் நாயகம் பதவி விலக வேண்டுமென ஐ.நா. வுக்கான இஸ்ரேல் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார். காஸா மீதான யுத்தத்தில் இஸ்ரேல் கையாளும் கொள்கைளும் செயற்பாடுகளும் முழு உலகிற்கும் தவறான முன்னுதாரணத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. இது ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன்’ என்ற நிலையை உருவாக்கிவிடக்கூடிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அது கறைபடிந்த வரலாறாக அமைந்துவிடலாம்.

ஆகவே ஐ.நா.வை மதித்து செயற்படக்கூடிய நிலைக்கு இஸ்ரேல் உடனடியாக திரும்ப வேண்டும். அதுவே காஸாவில் யுத்தம் முடிவுக்கு வரவும் அமைதி ஏற்படவும் வழிவகுக்கக் கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT