தேர்தலுக்கு முன் பிணைமுறி விவாதம் நடத்த ஐ.தே.மு எதிர்ப்பு | தினகரன்

தேர்தலுக்கு முன் பிணைமுறி விவாதம் நடத்த ஐ.தே.மு எதிர்ப்பு

பிரதமர் தலைமையில் விசேட கட்சி தலைவர் கூட்டத்தில் ஆராய்வு

தேர்தல்களுக்கு முன்னர், பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்த ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றின் மீது பாராளுமன்ற விவாதம் நடத்தப்படுவதை எதிர்ப்பதென ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் சந்தித்துக்கொண்டனர். அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், மலிக் சமரவிக்ரம, லக்ஷமன் கிரியெல்ல மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் ஒரு மணிநேரம் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மனோ கணேசன் இது குறித்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் இரண்டு அறிக்கை மீது பாராளுமன்ற விவாதமொன்று நடாத்தக் கோருவதற்கான காரணப் வேறொன்றுமல்ல, அரசியலே என மேற்படி கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல்களுக்கு முன்னரான பிரசார நடவடிக்கைகள் ஓய்ந்த அமைதிக் காலத்தை இது பாதிக்கும்மென்பதால் எதிர்வரும் பெப்ரவரி 8 இல் விவாதத்தை நடாத்துவது உகந்ததல்லதென நாம் தீர்மானித்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

எந்தவொரு ஊடகமும் விவாதத்தை நடாத்துவதற்கு முறுக்கிவிடலாம் என்பதுடன் அதனைத் திருத்துவதற்கு அதிக தாமதமாகிவிடுமெனவும் கருத்து வெளியிட்ட அவர், இன்று சபாநாயகரால் கூட்டப்படவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தேர்தல்களுக்கு முன்னர் பாராளுமன்ற விவாதத்தை நடாத்துவதற்கான தமது எதிர்ப்பை ஐக்கிய தேசிய முன்னணி கட்சித் தலைவர்கள் பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும்போது அரசாங்கமொன்றை அமைப்பதற்கு கூட்டு எதிரணியினருக்கு அழைப்பு விடுத்தமை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. கூட்டு எதிரணி உறுப்பினர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டிருந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகவே ஜனாதிபதி கடந்த 2015 ஜனவரியில் மக்கள் ஆணையைப் பெற்றிருந்தார்.

எனவே, கடந்த 2015 இல் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்கள், அத்தகைய கூட்டு எதிரணியினருடன் அரசாங்கமொன்றை ஜனாதிபதி அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்போவதில்லை.

எது எப்படியிருப்பினும், ஜனாதிபதியின் இந்தப் பேச்சு பாரதூரமானதொன்றல்ல எனவும் அவர் வெளியிட்டது வெறும் அரசியல் அறிக்கையொன்றே எனவும் நாம் கருதினோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 


Add new comment

Or log in with...