Home » நாடளாவிய ரீதியில் ‘சயீடா’ அமைப்பினால் கல்வி அபிவிருத்திகள் முன்னெடுக்க திட்டம்

நாடளாவிய ரீதியில் ‘சயீடா’ அமைப்பினால் கல்வி அபிவிருத்திகள் முன்னெடுக்க திட்டம்

பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் என்கிறார் இணைப்பாளர் நௌஸர் பௌஸி

by damith
November 6, 2023 12:17 pm 0 comment

நாடளாவிய ரீதியில் ‘சயீடா’ அமைப்பின் திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைப்பின் இலங்கை இணைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான நௌஸர் பௌஸி தெரிவித்தார்.’சயீடா’வின் திட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு கொழும்பிலுள்ள சயிடாவின் காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்; நாம் முன்னெடுத்து வரும் இந்த சேவையில் எந்த அரசியல் பின்னணியும் கிடையாது என்பதனை நான் முதலில் சொல்லி வைக்க கடமைப்பட்டுள்ளேன். அதனால் தான் எமது நிகழ்வுகளில் ஆளும், எதிர் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை வரவழைத்து அவர்களின் பங்குபற்றலோடு எமது நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறோம்.

எமது அமைப்பின் நோக்கம் நாட்டின் அனைத்து மக்களினதும் கல்வித்துறைக்கு பங்களிப்பு செய்வதேயாகும். கடந்த மாதம் எமது அமைப்பினால் தென் மாகாண பாடசாலைகளில் மேற்கொண்ட அபிவிருத்தி பணிகளில் அமைச்சர்களான காஞ்சன விஜேசேக்கர, ரமேஷ் பதிரன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அதேபோல், கம்பஹா மாவட்ட நிகழ்வுகளில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகளும், புத்தளம் மாவட்ட பாடசாலைகளில் முன்னெடுத்த அபிவிருத்தி திட்ட பணிகளில் இராஜாங்க அமைச்சர் சரத் நிசாந்த உட்பட ஆளுந்தரப்பு, எதிர்த் தரப்பு அரசியல் பிரமுகர்களும் ஒற்றுமையோடு கலந்து கொண்டு எமது திட்டங்களுக்கு ஆதரவு வழங்கினர். இதனைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

கடந்த 2ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளில் சுமார் 85 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம் பௌஸி, மனோ கணேசன், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்து கொண்டு எமது திட்டங்களுக்கு ஆதரவு வழங்கினர். இதனைத்தான் நான் எதிர்பார்க்கின்றேன்.

அனைவரையும் ஒன்றுசேர்த்து பயணிப்பதே காலத்தின் தேவையாகும். அரசியல் வருகின்றபோது விருப்பமான கட்சிகளில் களமிறங்கலாம். ஆனால், பாடசாலைகள் என்று வருகின்றபோது ஒற்றுமையுடன் செயற்பட்டால்தான் சமூகத்திற்கான பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

தொடர்ந்தும் எமது ‘சயீடா’ அமைப்பு நாட்டின் ஏனைய பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தியிலும் களமிறங்க தயாராக இருப்பதாகவும் அடுத்தகட்டமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மாகாண பாடசாலைகளுக்கும் எமது சேவையை விரிவுபடுத்த தீர்மானித்து வருவதாகவும் அமைப்பின் இணைப்பாளர் நௌஸர் பௌஸி மேலும் தெரிவித்தார்.

(அஜ்வாத் பாஸி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT