கலவரங்களைக் கடந்து வெளியான 'பத்மாவத்' | தினகரன்

கலவரங்களைக் கடந்து வெளியான 'பத்மாவத்'

கடும் எதிர்ப்புகள், சர்ச்சைகள், போராட்டங்கள், கலவரங்களைக் கடந்து ஏற்கனவே அறிவித்தபடி இந்தியா முழுவதும் 4,800 தியேட்டர்களில் கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை 'பத்மாவத்' திரைப்படம் வெளியாகி உள்ளது.

இருப்பினும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் 'பத்மாவத்' படத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றன. இதனால் அந்த 4 மாநிலங்களில் மட்டும் படம் வெளியிடப்படவில்லை. அதேசமயம் உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பான முறையில் படம் வெளியிடப்பட்டது.

நான்கு தென் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் திட்டமிட்டபடி படம் திரையிடப்பட்டுள்ளது. குஜராத்தில் 'பத்மாவத்' படம் 120 தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் ராஜபுத்திர இனத்தவர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக படம் வெளியிடப்படவில்லை.

இதுஇவ்விதமிருக்க, பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக பாடசாலை குழந்தைகள் வாகனம் மீது கார்னி சேனா வன்முறைக் கும்பல் கல்வீசித் தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு கிடைக்காது என்பதால் திரையரங்குகள் இப்படத்தை திரையிட மறுத்து விட்டன.

பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய எந்த காட்சியும் இல்லை எனத் தெரிவித்த பிறகும் இந்துத்துவா அமைப்பான கார்னி சேனா தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இதில் வெறித்தனமாக டெல்லி அருகே குருகிராமில் பாடசாலைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை கல்வீசித் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் பேருந்துகளில் ஆசனங்களுக்கு அடியே பதுங்கி அலறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கார்னி சேனா வன்முறையாளர்கள் 29 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குருகிராம் பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கார்னிசேனா கும்பல்களின் கொடூரத் தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என சமூக வலைதளங்கள் விமர்சித்து வருகின்றன. நாடு முழுவதும் கார்னி சேனாவின் இந்த வெறிச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கேள்விபட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது, இரவு முழுவதும் என்னால் உறங்க முடியவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நமது நாட்டின் தலைநகரத்தில் இருந்து சில கிலோ மீட்டருக்கு தொலைவில் நமது குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த செய்தி நமது ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வாரணாசியில் உள்ள திரையரங்கு வளாகத்திற்குள் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவரை மீட்டு காவலில் வைத்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் மாவட்டத்தில் பொலிசாருக்கும், பஜ்ரங் தால் தொண்டர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிஷிகேஷில் உள்ள திரையரங்கிற்கு வெளியே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது.

"உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் அனைத்து வாகனங்களையும், மக்களையும் சோதனையிட்ட பிறகே செல்ல அனுமதிக்கின்றோம். டேராடூனில் உள்ள திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும்ஹஸ்ஃபுல் ஆகிவிட்டது. நாங்கள் எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளோம். தேவைப்பட்டால் கைது நடவடிக்கையிலும் ஈடுபடுவோம்" என்று டேராடூன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் ராய் தெரிவித்துள்ளார்.

ெபாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக கூறியே, அந்த சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. குர்கான், அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பேருந்து, இருசக்கர வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

கோடி ரூபா பணம்:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கான்பூர் சத்ரிய மகாசபை அமைப்பினர், பத்மாவத் திரைப்படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனின் மூக்கை அறுத்து வருபவர்களுக்கு கோடி ரூபாயை கொட்டிக் கொடுப்போம் என்று அறிவித்துள்ளனர்.

அந்த அமைப்பின் தலைவர் கஜேந்திர சிங் ரஜாவத் கூறுகையில், நாங்கள் கான்பூர்க்காரர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வருகிறோம். யார், தீபிகாவின் மூக்கை வெட்டி வருகிறார்களோ அவர்களுக்கு அந்தப் பணத்தை கொட்டிக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாங்கள் கடவுளாக வணங்கும் ராணி பத்மாவதியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக ராஜபுத்திரர்கள் அமைப்பு அத்திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க, 'பத்மாவதி' என்று பெயரிடப்பட்ட திரைப்படம் 'பத்மாவத்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. வெளியான சில பகுதிகளிலும் அந்தப் படம் போராட்டங்களையே எதிர்கொண்டுள்ளது.

யார் இந்த பத்மாவதி?

போர்க்களங்களை காட்டும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களே போர்க்களத்தில் நிற்பதுபோல உணர்வு உண்டாகிறது. திரைப்படத்தின் இறுதியில் ராஜபுத்திரர்களையே வாழ்த்தித்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்கள் வாக்கைக் காப்பாற்ற ராஜபுத்திரர்கள் எதையும் செய்வார்கள், ஒருவரை விருந்தினராக ஏற்றுக்கொண்டபின் ராஜபுத்திரர்கள் அவர்கள் கழுத்தில் கத்தி வைக்க மாட்டார்கள், எதிரியிடம் சிக்கிக் கொண்டாலும் ராஜபுத்திரர்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள், ராஜபுத்திர படை வீரன் எதிரிகளையும் ஏமாற்ற மாட்டான் என்பன போன்றவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ராஜபுத்திர பெண்ணான ரூப் கன்வர் எனும் இளம் பெண் ராஜஸ்தானில் உள்ள தியோரலா கிராமத்தில், இறந்துபோன தனது கணவரின் சிதையில் வைத்து எரிக்கப்பட்டபோது, 'சதி' எனப்படும் உடன்கட்டையேறுதலை ஆதரித்த ராஜபுத்திர அமைப்புகள், அவ்வழக்கை கடுமையாக விமர்சித்தவர்களையும் அணிதிரண்டு எதிர்த்தனர். அவர்கள்தான் தற்போது இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்.

'பத்மாவத்' திரைப்படத்தில் இஸ்லாமிய கதாபாத்திரங்களை தீயவர்களாக சித்தரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னும் இஸ்லாமிய அமைப்புகள் கிளம்பியுள்ள செய்திகள் இதுவரை எதுவும் வரவில்லை. எனினும் அத்திரைப்படத்தை தடை செய்த மாநில அரசுகள் ராஜபுத்திரர்கள் அமைப்புகளின் கோபத்தை அப்படியே வைத்திருக்க ஏன் விரும்புகின்றன என்றும் தெரியவில்லை.

தீபிகா படுகோனின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு பத்து கோடி ரூபா பணம் சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கிறார் இன்னொரு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்.

ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ராஜ் ஷெகாவாத் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை அஹமதாபாத்தில் நடத்தி வருகிறார்.

ராஜ் ஷெகாவத்தான் குஜராத் அரசாங்கத்தின் , `வைப்ரண்ட் குஜராத்` போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியார் பாதுகாப்பு கொடுத்து வந்தார். ஆனால், இப்போது அவர் அறியப்படுவது அந்தக் காரணத்துக்காக அல்ல.நேற்றுமுன்தினம் அவர் வேறு ஒரு காரணத்துக்காக கவனம் பெற்றுள்ளார். கடந்த சில வாரங்களாக சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்களை கர்னி சேனா முன்னெடுத்து வருகிறது அல்லவா? அந்த அமைப்பின் தலைவர்தான் ராஜ் ஷெகாவத்.

பத்மாவத் திரைப்படத்தை பார்க்கச் சென்றால் மோசமான விளைவுகளை சந்திக்கக் கூடும் என்றும் திரையிடும் திரையரங்குகளை கொளுத்தப் போவதாகவும் ஷெகாவத் மிரட்டும் வீடியோக்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன. ஆனால், இதுநாள் வரை அவர் மீது எந்த வழக்குகளும் நிலையத்தில் பதியப்படவில்லை.

இதில் விந்தை என்றால், இவர் தலைமை வகிக்கும் கர்னி சேனா அமைப்பு, பத்மாவத் திரைப்படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனின் மூக்கை அறுத்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துக் கொண்டு இருந்த சமயத்தில், தீபிகாவின் அஹமதாபாத் பயணத்தின்போது அவருக்குப் பாதுகாப்பு கொடுத்தது ஷெகாவத்தின் பாதுகாப்பு நிறுவனம்தான்.

ஆனால், பத்மாவத் திரைப்படம் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியப் பின், அவர் அந்த படம் குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் தென்பட்டார். அந்த விவாதங்களில் ஷெகாவத், `பத்மாவத்` திரைப்படத்தை திரையிடும் திரையரங்கங்கள் மற்றும் இந்த திரைப்படத்திற்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்தார்.

ஒரு பக்கம் திரையரங்கங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டே இன்னொரு பக்கம் தொலைக்காட்சிகளில் திரையரங்கங்களை எரித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார்.

`தர்மா` மற்றும் `கர்மா` ஒன்றோடு ஒன்று கலக்கக் கூடாது. ஒரு செயற்பாட்டாளானாக என்னுடைய செயல்கள் வேறு, என்னுடைய தொழில் என்பது வேறு. என் மதத்தையும், வரலாற்றையும் பாதுகாப்பதற்காக நான் கர்னி சேனா அமைப்பில் இருக்கிறேன்.

"நான் என் நிறுவனத்தில் பணிபுரிபவர்களிடம் திரையரங்கங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கச் சொல்லி இருக்கிறேன். ஒருவேளை பெரும் வன்முறை வெடித்தால், பொலிஸ் துறைக்கு தகவல் சொல்ல சொல்லி இருக்கிறேன்" என்றார் அவர்.

கடைகள், அரசாங்க சொத்துக்கள் தாக்கப்படுவது, தீயிட்டு கொளுத்தப்படுவது குறித்து அவரிடம் கேட்ட போது, "யார் அவர்கள் என்பது எனக்குத் தெரியாது. நாங்கள் அந்தப் படத்தை எதிர்க்கிறோம். நாங்கள் திரையரங்களுக்குச் சென்று, அந்த படத்தை பார்க்க வரும் மக்களிடம், பூங்கொத்து கொடுத்து இந்தப் படத்திற்கு செல்லாதீர்கள் என்று சொல்லுவோம்" என்கிறார்.

அரசியல் தொடர்பை மறுக்கும் அவர், தாம் தன் தொழிலில் மிக நேர்த்தியாக இருப்பதால்தான் மக்களுடனும், அரசாங்கத்துடனும் நல்ல தொடர்பில் இருப்பதாக கூறுகிறார்.

குஜராத்தின் மிக மூத்த அதிகாரி தன்னை தொடர்பு கொண்டு கர்னி சேனா அமைப்பின் கோபத்தை தணிக்க உதவி கேட்டதாகவும் ஷெகாவத் கூறுகிறார்.


Add new comment

Or log in with...