வெளிநாட்டுக் கடனாக நாட்டுக்குள் வந்த 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? | தினகரன்

வெளிநாட்டுக் கடனாக நாட்டுக்குள் வந்த 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது?

 

* நிதி அமைச்சில் எந்தவித ஆவணங்களும் இல்லை
* 3 வருட அரச வருமானம் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம்

புதிய கொடூர மோசடி கும்பல் கூட்டணிக்கு எதிராக ஊடகங்கள் செயற்பட வேண்டும் - ஊடக நிறுவன தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி

கடந்த பத்து வருட காலப்பகுதியில் 10 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டு கடனாக இலங்கை பெற்றுள்ள போதிலும் ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கே சொத்துகளும் அதற்கான ஆவணங்களும் உள்ளன. எஞ்சிய 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்பதற்கான எந்தவித ஆவணமும் நிதியமைச்சில் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

அத்துடன் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு நேரடியாக வந்த வருமானங்கள் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும் இதன் விளைவாக அரசுக்கு பெரும் தொகை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நடந்து கொண்டிருந்த போது இடம்பெற்ற சில சம்பவங்கள் தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள அதேநேரம் நாட்டில் இன, மத, கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் கொடூர மோசடிக் கும்பல் கூட்டணியொன்று உருவாகியுள்ளது.

இவ்வாறான கொடூர மோசடிக்கார கும்பலுக்கு எதிராக ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள்,  பணிப்பாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்நதும் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது,

எமது நாட்டில் கடந்த பத்து வருட காலப்பகுதியில் வெளிநாட்டு கடனாக 10 ட்ரில்லியன் ரூபா கடனாகப் பெறப்பட்டுள்ளது. ஒரு ட்ரில்லியன் என்பது ஆயிரம் கோடி ரூபாவாகும். இக்கடன் பெறப்பட்டதற்கான தெளிவான சான்றுகள் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இக்கடன் நிதி நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளன.

ஆனால் நாட்டுக்குள் வந்து சேர்ந்துள்ள இக்கடன் நிதியில் சொத்துக்கள் என்ற வகையில் காட்டக் கூடியததாக ஒரு ட்ரில்லியன் ரூபா மாத்திரம் தான் உள்ளது. அந்த 10 ட்ரில்லியன் ரூபாவும் நாட்டில் எங்காவது இருக்க வேண்டும்.

ஒன்றில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களாக அல்லது கட்டடங்களாக அல்லது உணவு வழங்கியதாக என்றபடி அந்த நிதி பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் நிதியமைச்சில் இருக்க வேணடும். ஆனால் இந்த 10 ட்ரில்லியன் ரூபாவில் ஒரு ட்ரில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் தான் நிதியமைச்சில் உள்ளன. எஞ்சிய 09 ட்ரில்லியன் ரூபாவுக்கும் எந்த ஆவணமும் இல்லை. இது ஆச்சரியப்படத்தக்க விடயமாக உள்ளது.

2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் எமது நாட்டின் முழு வெளிநாட்டு கடன் குறித்தும் அவற்றின் மூலம் ஆற்றப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் தெளிவாக நாட்டுக்கு முன்வைக்குமாறு அமைச்சரவையிடம் எண்ணிலடங்கா தடவைகள் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

ஆனால் அது நடக்கவில்லை. இதற்கு சிலர் ஆணைக்குழு அமைக்கலாம் என்று கூற முடியும். எத்தனை ஆணைக்குழுக்களைத் தான் நியமிப்பது. அவற்றுக்கும் ஒரு வரையரை இருக்க வேண்டும். இங்கு பிரச்சினைகள் இருப்பது தெளிவாகின்றது. இவை கடந்த 10 வருட காலப்பகுதியின் நிலைமையாகும்.

இவை இவ்வாறிருக்க, கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு நேரடியாக வந்த வருமானங்கள் அரசாங்கத்தின் எதுவித அனுமதியும் இன்றி திறைசேரியிலிருந்து தனியார் நிறுவனங்களுக்கு திருப்பப்பட்டுள்ளது. இதனூடாக திறைசேரி பெருந்தொகையான அரச வருமானத்தை இழந்துள்ளது.

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மேலும் குறிப்பிட்டார்.

 

மர்லின் மரிக்கார் 


There is 1 Comment

is the trillion 1000 crore or 100,000 crore?

Add new comment

Or log in with...