நாட்டு நலனில் அக்கறை காட்டுவோம் | தினகரன்

நாட்டு நலனில் அக்கறை காட்டுவோம்

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை இரண்டையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் விவாதிப்பதை சில கட்சிகள் தாமதப்படுத்தி வருவதாக கடும் விசனத்தை வெளிப்படுத்தி இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல யாராக இருப்பினும் தன்னோடு நேரடி விவாதத்துக்கு முன்வருமாறு சவால்விடுக்கும் தொனியில் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மத்திய வங்கி பிணைமுறி விடயத்திலும், ஊழல் மோசடி விவகாரத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதே தமது நோக்கமெனவும் யாரையும் பழிவாங்கும் எண்ணம் தம்மிடம் கிடையாதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார். மத்திய வங்கி பிணைமுறி விவகார விசாரணை ஆணைக்குழு அதன் அறிக்கையில் 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மோசடி குறித்தும் சுட்டிக்காட்டி அதுவும் விசாரிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

அனைத்து மோசடிகள், முறைகேடுகளையும் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது நாட்டின் தலைவன் என்ற ரீதியில் தனது கடப்பாடு எனச் சுட்டிக்காட்டி இருக்கும் ஜனாதிபதி இந்த முறைகேடுகளுடன் தொடர்புபட்ட இருதரப்பினர்களும் இந்த விடயத்தில் ஒன்றுபட்டுள்ளனர். விவாதத்தை உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை பின்போடுவதற்கு தீர்மானித்துள்ளனர். இது ஏன் எனக்கேள்வி எழுப்பியிருக்கும் ஜனாதிபதி முடிந்தால் 10 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்தை நடத்திக்காட்டுமாறு சவால் விடுத்திருக்கிறார்.

உண்மையிலேயே இவ்விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உரிய முறையில் தெளிவுபடுத்தப்படவேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இதனையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். ஊழல் மோசடிகள், முறைகேடுகள், அனைத்தும் விசாரிக்கப்பட்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட வேண்டும். இனிமேல் ஊழல் மோசடிகளற்ற தூய்மையான நாடாக எமது நாட்டை மாற்றியமைக்க முன்வரவேண்டும். இதனை அரசியல் கண்கொண்டு பார்க்காமல் நாட்டுப்பற்றுடன் நோக்கவேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

எமது நாட்டுக்குத் தேவைப்படுவது ஊழல் மோசடிகளற்ற அரசியல்வாதிகளாகும். அதேபோன்று நேர்மையான அதிகாரிகளும் மிக முக்கியமானதாகும். அரசு இயந்திரம் சீராக இயங்கத் தவறினால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படும். அதிகாரிகள் மட்டத்தில் நடக்கக் கூடிய முறைகேடுகளுக்கு அரசியல் ரீதியிலும் ஒத்துழைப்புகள் கிட்டுவதால் அவை நிறையவே மூடிமறைக்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது அரசு இயந்திரமும், நாட்டு மக்களுமே யாகும்.

இந்த ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே இதில் தொடர்புபட்ட தரப்பினர்கள் ஒன்றுகூடி இதனைத் தடுப்பதற்கு இரகசிய திட்டம் வகுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே இந்த அறிக்கைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுவது மிக மிக அவசியமானதாகும். ஏனெனில் கடந்த காலங்களில் இதுபோன்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டபோதும் அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன. அல்லது மாயமாகிப் போனதே வரலாறாகும். இந்த அறிக்கைகளுக்கும் அப்படி நடந்துவிடக்கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதையே காணக்கூடியதாக உள்ளது.

நாட்டு மக்கள் ஏமாற்றப்படக்கூடாது நாட்டில் நீதியும், நேர்மையும் மேலோங்கவேண்டும். அரசாங்கம் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். 2015ல் நல்லாட்சிக்கான ஆணையை வழங்கிய நாட்டு மக்கள் ஊழல் மேசாடிகளற்ற முறைகேடுகள் களையப்பட்ட ஒரு நாட்டையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆட்சியிலும் ஊழல், மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. மக்கள் மற்றொரு முடிவை எடுக்கும் நிலைக்கு இடமளிக்கப்படக்கூடாது.

இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர். ஊழல் மோசடிகளிலும், முறைகேடுகளிலும் தொடர்புபட்டவர்கள் யாராக இருப்பினும் தண்டிக்கப்படவேண்டுமென்பதில் உறுதியாகவே இருக்கின்றார்கள். ஆனால் இந்த அறிக்கைகள் விடயத்தில் விவாதிப்பதை தாமதப்படுத்துவதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? அதற்கு உயர்மட்டத்தில் ஒத்துழைப்பு கிட்டியுள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.

ஜனாதிபதி விடுத்திருக்கும் சவால் முக்கியமானதொன்றாகும். 10 ஆம் திகதி தேர்தல் நடப்பதற்கு முன்னர் குறைந்த பட்சம் ஒரு நாள் மட்டுமாவது விவாதத்தை நடத்திக்காட்டுமாறு கேட்டிருக்கிறார். அவ்வாறு நடத்தப்பட்டால் பல உண்மைகள் வெளியாகலாம் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வாதப்பிரதிவாதங்களை நாம் ஒருபுறம் தள்ளி நல்லாட்சி அரசின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய அதிகாரத்திலிருக்கும் இரு தரப்பினரும் ஒன்றுபட்டு தீர்மானம் எடுக்க வேண்டியது அவசியமானதொன்றாகும். ஊழல் மோசடிகளையும், முறைகேடுகளையும் நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். கட்சி அரசியலை புறந்தள்ளி நாட்டு நலன கருதி இது விடயத்தில் உறுதியான முடிவெடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வைக்கின்றோம்.


Add new comment

Or log in with...