Thursday, March 28, 2024
Home » ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருதுக்கு வடிவேல் சக்திவேல் தெரிவு

ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருதுக்கு வடிவேல் சக்திவேல் தெரிவு

by damith
November 6, 2023 8:29 am 0 comment

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் கிழக்கு மாகாண இலக்கிய விழாவின் 2023 ஆண்டுக்கான ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருதுக்கு மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவரும் தினகரன் பிரதேச செய்தியாளருமான வடிவேல் சக்திவேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண இலக்கிய விழா 2023 ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதிலேயே இளங்கலைஞர் விருதுக்கு ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பெருநிலப்பப்புக்குட்பட்ட களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்தவரும், தற்போது களுதாவளை கிராமத்தில் வசிப்பவருமான ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் தனது ஆரம்பக்கல்வியை களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்திலும், உயர்கல்வியை திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் (தேசியபாடசாலை) கற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் தனது பி.ஏ. பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கைநெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

அவர் உள்ளூர் பத்திரிகைகள் சிலவற்றில் ஊடகவியலாளராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து நடத்திய விருது வழங்கும் நிகழ்வில் ‘சிறந்த மக்கள் சேவை ஊடக விருது’ பெற்றார். களுமுந்தன்வெளி விநாயகர் கலைக்கழகம் நடத்திய விருது வழங்கும் நிகழ்வில் ‘சிறந்த பிரதேச ஊடகவியலாளர் விருது’ பெற்றார். களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் நடத்திய கௌரவிப்பு நிகழ்வில் ஊடகவியலாளர் வ.சக்திவேலுக்கு பிரதேசத்தின் சிறந்த ஊடகவியலாளர் விருது வழங்கப்பட்டது.

யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பும், ஊடக தெழிற்சங்க சம்மேளனமும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் ‘சிறந்த கட்டுரையாளருக்கான (தமிழ்) விருது’ வழங்கப்பட்டது. களுமுந்தன்வெளி ஸ்ரீமுத்துமாரியம்மனைப் பற்றி சக்திவேல் எழுதிய பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.

13.12.2022 அன்று நடைபெற்ற இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையுடன் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த ஊடகவியலாளருக்கான ‘சுப்பிரமணியம் செட்டியார்’ விருது வழங்கி வடிவேல் சக்திவேல் கௌரவிக்கப்பட்டார்.

வடிவேல் சக்திவேல் செய்தியாளர், கட்டுரையாளர், பாடலாசிரியர், கவிஞர், விவசாயி, சமூகசேவையாளர் என பன்முகத் திறமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளார்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவிப் பயிற்றுவிப்பாளர், யோகாசன பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

செல்லையா -பேரின்பராசா (துறைநீலாவணை நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT