பீபா 2018 கிண்ண உலக வலம்; இலங்கையிலிருந்து ஆரம்பம் | தினகரன்

பீபா 2018 கிண்ண உலக வலம்; இலங்கையிலிருந்து ஆரம்பம்

 

  • முதன் முறை இலங்கையில் பீபா கிண்ணம்
  • இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள 2018 - உலகக்கிண்ண கால்பந்து போட்டித்தொடரின் வெற்றிக்கிண்ணம் நேற்று (23) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன், அதனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

உலகக் கிண்ண உலக வலம் ஜனவரி 23 முதல் ஏப்ரல் 30 வரை இடம்பெறவுள்ளதோடு, உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ளன.

சுமார் 126,000 கிலோ மீற்றர் பயணத்தைக் கொண்ட, உலகக் கிண்ண உலக வலம் நிகழ்வில், வெற்றிக்கிண்ணத்தின் முதலாவது பயணமாக அது இலங்கைக்கு கொண்வரப்பட்டுள்ளது. மேலும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிய நாடுகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான், மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு மாத்திரமே 2018 கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவிக்கின்றது.

அதற்கமைய, நேற்றைய தினம் விசேட விமானத்தின் மூலமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணத்தை இலங்கை கால்பந்து ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக இன்றைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் வெற்றிக்கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா மற்றும் இலங்கை கால்பந்து குழுவின் உறுப்பினர்களும் 1998 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண கால்பந்து வெற்றிக்கிண்ணத்தை வெற்றிகொண்ட பிரான்ஸ் கால்பந்து குழுவினரும் பங்குபற்றினர்.

பீபா உலகக் கிண்ணம் 2018, எதிர்வரம் ஜூன் 14 முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ரஷ்யாவில் இடம்பெறவுள்ளது. இதில் 32 அணிகள் பங்குபற்றுகின்றன.

 


Add new comment

Or log in with...