சிங்கப்பூருடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை | தினகரன்


சிங்கப்பூருடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கையின் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க நிகழ்வொன்று நேற்றுமுன்தினம் கொழும்பில் நடந்தேறி இருக்கின்றது. அதுதான் இலங்கையும் சிங்கப்பூரும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமைகும்.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியங்க் லூங் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்புக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அரச மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் இருபக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இவ்வுடன்படிக்கையில் இலங்கை சார்பில் மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், சிங்கப்பூர் சார்பில் அந்நாட்டு வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர், 'இந்த உடன்படிக்கையின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டு விடயங்களில் எதிர்வரும் காலங்களில் பல்வேறு நன்மைகள் தரும் சந்தர்ப்பங்கள் உருவாகும்' என்றும் 'தொழில் பயிற்சி, புதிய தொழில் வாய்ப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றுக்காக சிஙகப்பூர் இலங்கைக்கு அளித்து வரும் உதவிகள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் விரிவுபடுத்தப்படும்' என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 'இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக முயற்சிகளுக்கான முதலீட்டு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அதனால் இலங்கையில் முதலிட சிங்கப்பூர் முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு' கேட்டுக் கொண்டார். இதற்கு சாதகமான பதிலை சிங்கப்பூர் பிரதமர் அளித்துள்ளார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையின் ஊடாக இலங்கையானது தனது வர்த்தக, முதலீட்டு நடவடிக்கைகளை தெற்காசியப் பிராந்தியத்திற்கு வெளியே விரிவுபடுத்த அடித்தளம் இட்டிருக்கின்றது. ஏற்கனவே தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுடனும், தெற்காசியப் பிராந்திய நாடுகளுக்கான 'சப்டா' அமைப்புடனும் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளைக் கொண்டுள்ளது. அவ்வுடன்படிக்கைகளின் ஊடாக பல்வேறு வகையான பொருளாதார நன்மைகளை இந்நாடு பெற்றுக் கொள்கின்றன.

அந்த வகையில் தற்போது சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த உடன்படிக்கையின் ஊடாக இந்நாட்டு வர்த்தக துறையினரும், முதலீட்டாளர்களும் அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இந்நாட்டின் உற்பத்திகளுக்கு சிங்கப்பூரில் சந்தை வாய்ப்பு கிடைக்கப் பெறவிருக்கின்றது.இதன் பயனாக இந்நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகள் மேலும் விரிவடையும். அது உள்நாட்டில் புதிததாக நேரடி மற்றும் மறைமுகத் தொழில் வாய்ப்புக்கள் உருவாகவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

சிங்கப்பூரானது கைத்தொழில் பொருளாதாரத்தில் அதிக பட்ச வளர்ச்சியை அடைந்துள்ள நாடாக விளங்குகின்றது. அது ஆசியாவின் கேந்திரப் பொருளாதார முக்கியத்துவம் மிக்க நாடாகவும் இன்று திகழுகின்றது. 719.9 சதூர கிலோ மீற்றர்கள் பரப்பளவைக் கொண்ட இந்நாட்டில் 5,607,300 மக்கள் 2016 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி வசித்துக் கொண்டிருக்கின்றனர். 96 சதவீத எழுத்தறிவைக் கொண்டிருக்கும் இந்நாட்டினரினரின் தலா வருமானமோ 52,600 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இவ்வாறு உலகில் கைத்தொழில் துறையில் வளர்ச்சியடைந்து காணப்படும் இந்நாட்டை லீ குவான் யூ கட்டியெழுப்பினார். அவர்தான் சிங்கப்பூரின் தந்தையென அழைக்கப்படுகின்றார். 1959 ஜுன் மாதம் 03 ஆம் திகதி முதல் மூன்று தசாப்தங்கள் அந்நாட்டு பிரதமராகப் பதவி வகித்த அவர் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு தான் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினார். இதனை அவரே ஒரு தடவை பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு ஒரு நாடு கட்டியெழுப்பப்பட்டு இருக்கின்றது என்றால் அது சிங்கப்பூரே அன்றி இல்லை என உறுதிபடக் கூற முடியும். அந்தளவுக்கு இந்நாடு ஒரு கட்டத்தில் வளர்ச்சி அடைந்திருந்துள்ளது என்பதையே அவரது கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. என்றாலும் தவறான அரசியல் மற்றும் பொருளாதாரஅணுகுமுறைகளால் தான் இலங்கை தொடர்ந்தும் வளர்முக நாடாகவே இருக்கின்றது.

இந்நாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட சிங்கப்பூருடன் 1979 ஆம் ஆண்டில் தான் இராஜதந்திர உறவுகளை இலங்கை ஆரம்பித்தது. அந்த உறவு 40 வருடங்களை அண்மித்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இச்சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்டடிருக்கின்றது.

ஆகவே இலங்கை மேற்கொண்டிரு-க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கை இந்நாட்டுக்கு பல்வேறு வகையிலும் நன்மைகளைக் கொண்டு வருவதோடு இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் திருப்பு முனையாகவும் உந்து சக்தியாகவும் அமையும். இதனை உறுதிபடக் கூற முடியும்.


Add new comment

Or log in with...