சர்சையில் சிக்கிய ஷபீக் ரஜாப்தீன் இராஜினாமா! | தினகரன்


சர்சையில் சிக்கிய ஷபீக் ரஜாப்தீன் இராஜினாமா!

 

கிழக்கு மாகாண முஸ்லிம்களை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட சர்ச்சை தொடர்பில் ஷபீக் ரஜாப்தீன், தான் வகித்த பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே அவர் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஷபீக் ரஜாப்தீன் வெளியிட்டிருந்த குறித்த பேஸ்புக் பின்னூட்ட (Comment) விவகாரம் தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் விளக்கம் கோரப்பட்ட நிலையிலேயே, அவர் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடுகளை விமர்சித்து பேஸ்புக்கில் ஷபீக் ரஜாப்தீன் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு அரசியல் விமர்சகர்களும் தங்களது பலத்த கண்டனங்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டிருந்ததோடு, கட்சி முக்கியஸ்தர்களும் இது தொடர்பில் கட்சியின் உயர் பீடத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் குறித்த கருத்துகள், தனிப்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் தாம் தெரிவித்ததாக, ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்திருந்ததோடு, கிழக்கு முஸ்லிம்கள் பாதிப்படைந்திருந்தால் அது குறித்து தாம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...