அதிபர் மண்டியிட்ட சம்பவம்; ஊவா முதலமைச்சருக்கு பிணை (UPDATE) | தினகரன்

அதிபர் மண்டியிட்ட சம்பவம்; ஊவா முதலமைச்சருக்கு பிணை (UPDATE)

 

ஊவா மாகாண சபை முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ரூபா  2 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு, பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதிபர் மண்டியிட்ட சம்பவம்; ஊவா முதலமைச்சர் சரண்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இன்று (23) முற்பகல் தனது வழக்கறிஞருடன் பொலிஸ் நிலையம் வந்த அவர் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவி ஒருவரை பாடசாலையில் அனுமதிக்காமை தொடர்பில், ஊவா மாகாண சபை கல்வி அமைச்சின் செயலாளரின் உத்தரவுக்கமைய, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய பெண் அதிபரை மண்டியிட செய்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில், அவர் தனது மாகாண கல்வியமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்ததோடு, இது தொடர்பில் உரிய விசாரணைகள முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முதலமைச்சரை கைது செய்யுமாறு தெரிவித்து குறித்த பாடசாலைக்கு முன்னால் நேற்றைய தினம் (22) ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் குறித்த பாடசாலை அதிபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

சரணடைந்த முதலமைச்சரை இன்று (23) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Add new comment

Or log in with...