கதிர்காம நகரத்தில் கலகம் விளைவித்த 58 பேருக்கும் பிணை | தினகரன்

கதிர்காம நகரத்தில் கலகம் விளைவித்த 58 பேருக்கும் பிணை

 

கதிர்காமம் நகர் பகுதியில் பொலிசாரின் ஆணையை மீறி சென்றவர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான 13 பெண்கள் உட்பட 58 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (20) இரவு 10.55 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குறித்த சம்பவத்தில் கதிர்காமம் நாகஹ வீதியைச் சேர்ந்த 44 வயது  நபர் உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டதோடு, நேற்றைய தினம் (21) அதிகாலை 1.00 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தின் யன்னல் கண்ணாடிகள் மற்றம் பொலிசாரின் வாகனங்கள் மீது கல் வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டதோடு, வீதியை மறித்து டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த நபர்களை அங்கிருந்து அகற்றுவதற்காக பொலிசார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டதோடு,

சம்பவத்தின் போது, போக்குவரத்துக்கு இடைஞ்சல், வீதியை சேதப்படுத்தியமை, பொலிசாரை காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் 58 பேரை நேற்று (21) பொலிசார் கைது செய்திருந்தனர்.

குறித்த நபர்கள் நேற்று (21) திஸ்ஸமஹாராமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, ரூபா 2 இலட்சம் கொண்ட சரீரப் பிணை உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நிபந்தனைகள்
1. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிடல்.
2. மீண்டும் இவ்வாறு கலகம் விளைவித்தால் சிறையில் அடைத்தல்.
3. ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் மு.ப. 9.00 - 12.00 வரை கதிர்காமம் பொலிசில் கையொப்பமிடல்.
4. மரணித்தவரின் இறுதிக் கிரியைகள் நிறைவடையும் வரை இவ்வாறு கலக சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குறித்த சம்பவத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு, ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதோடு, சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் கீழ், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் (CID) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...