மானிய மண்ணெண்ணெய் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும் | தினகரன்

மானிய மண்ணெண்ணெய் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும்

 

- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை மண்ணெண்ணெயை, வாகனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மொத்த விற்பனையாக கொள்கலன்களில் விற்பனை செய்வதற்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தடைவிதித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் தம்மிக ரணதுங்கவின் கையொப்பத்தைக் கொண்ட ஜனவரி 18 ஆம் திகதி இடப்பட்ட இல. 987 எனும் சுற்றறிக்கையிலேயே இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை நாடுபூராகவும் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் வரும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறை மண்ணெண்ணெயானது நிறமற்றதாக காணப்படும். இது தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.

இலங்கை மண்ணெண்ணெய் மற்றும் தொழிற்துறை மண்ணெண்ணெய் என இரு வகையான மண்ணெண்ணெய்கள் சந்தையில் காணப்படுகின்றன. இலங்கை மண்ணெண்ணெயானது அரசாங்கத்தினால் மானிய விலையில் குறைந்த வருமானம் பெறும்வோரையும் மீனவர்களையும் நோக்காகக் கொண்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அது சிவப்பு நிறமானதாக காணப்படும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை மண்ணெண்ணெயை மானிய அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும்வோருக்கும் மீனவர்களுக்கும் பொருளாதார உதவியை வழங்கும் நோக்கில், ஒரு லீட்டர் ரூபா 30 எனும் விலையில், கூட்டுத்தாபனம் நஷ்டத்தை பொறுப்பேற்கும் வகையில் விற்கப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதற்கான முக்கிய காரணமாக ஒரு சில எரிபொருள் விநியோகத்தர்கள், பாரிய இலாபம் ஈட்டும் நோக்கில், இலங்கை மண்ணெண்ணெயை வர்த்தக மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கவும், பஸ்கள் மற்றும் பவுசர்களுக்கு மண்ணெண்ணெயை வழங்கவும், டீசலில் மண்ணெண்ணெயை கலந்து விற்றகவும் முனைந்தமையுமாகும்.

ஆயினும் அவ்வாறான செயற்பாடு சட்டவிரோதமானது என, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனவே அவ்வாறான குற்றங்களை மேற்கொண்டால் குறித்த எரிபொருள் நிலையத்தின் அனுமதிப்பத்திரம் நீக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர், குறித்த சுற்றறிக்கையில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கும் மீனவர்களுக்கும்  நிவாரணம் வழங்கும் பொருட்டு மானிய விலையில் விற்கப்படும் இலங்கை மண்ணெண்ணெயை, அவர்களுக்கு மாத்திரம் விநியோகிக்க வேண்டும் எனவும், பெட்ரோல் மற்றும் டீசலில் மண்ணெண்ணெயை கலப்பது சட்டவிரோதமானது எனவும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விதிமுறைகளை மீறும் எரிபொருள் நிலையங்களின் அனுமதி இரத்து செய்யப்படும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...