பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார் | தினகரன்

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

 

நாளை சென்னையில் இறுதிக் கிரியைகள்

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

நாளை சென்னையில் இறுதிக் கிரியைகள்

ஈழத்து பொப்பிசைச் சக்கரவர்த்தி என அழைக்கப்படும் பாடகர் ஏ.ஈ. மனோகரன் தனது 73வது வயதில் காலமானார்.

சென்னை கந்தன்சாவடியில் வசித்து வந்த ஏ.ஈ. மனோகரன் நேற்று (22) இரவு 7.20 மணியளவில் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

அண்மைய நாட்களாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிற்சைபெற்றுவந்த மனோகரன் உடல் உபாதைகளுக்கு உட்பட்டிருந்த நிலையிலேயே இன்று சாவடைந்துள்ளார்.

இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அவரது மனைவி திரேசா மனோகரன் அறிவித்துள்ளார்.

1965 இல் பாசநிலா படத்தில்,(ஈழத்துப்படம்) 1975ல் புதியகாற்று திரைப்படத்தில், 1978 இல் வாடைக்காற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.

"சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா" என்ற பாடல், ஈழத்தில் மாத்திரமல்ல, தமிழகம் உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெற்றது. அத்துடன் அந்தப்பாடலை ஹிந்தி, மலையாளம், பேரர்த்துக்கல் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி உலக கலைஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.

போன்ற இவரது பொப்பிசை பாடல்கள் இன்றும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றன.

'வாடைக்காற்' 'பாசநிலா' ' புதிய காற்று' ஆகிய பல ஈழத்து தமிழ் திரைப் படங்களிலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்திலும் இணைந்து நடித்து பெருமை சேர்த்தவர்.

இவர் இறுதியாக மாதவனுடன் ஜேஜே படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

அத்திப்பூக்கள், திருமதி செல்வம்,அஞ்சலி போன்ற இந்திய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்தார்.

இவரின் இறுதிக் கிரியைகள் பொதுமக்கள், கலைஞர்கள் உள்ளிட பலதுறையினரின் அஞ்சலிக்குப் பின்னர், நாளை (24) ஆம் திகதி புதன்கிழமை சென்னையில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ.இ.மனோகரன்

ஏ.ஈ. மனோகரன் ஒரு தலைசிறந்த பப்பிசைப் பாடகர் மற்றும் நடிகர். இவரது தாய்,தந்தை இருவரும் ஆசிரியர்கள். பெற்றோர்கள் பாடும் ஆற்றல் பெற்றவர்களாதலால் அவர்கள் வழியே இவரும் பாடகரானார். ஆரம்பத்தில் தேவாலயங்களில் பாடி வந்தார். பின்னர் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் போது பாடிக்கொண்டிருந்தவர் தொடர்ந்து இசைக்கச்சேரிக்குழுவில் இணைந்தார். இலங்கை, கொட்டஹேன என்ற பகுதியில் முதன்முதலாக இசைக்கச்சேரியில் ஒரு பாடல் பாடினார். அந்தப் பாடல்தான் சுராங்கனி. அதற்காக இவர் பெற்ற ஊதியம் ரூ.50/-. இதனால் இதே பாடலை இந்தியாவில் சென்று பாடவேண்டுமென்ற ஆர்வம் இவருக்கு ஏற்பட்டது. அதனால் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து சென்னையில் எச்.எம்.வி.யின் சரஸ்வதி ஸ்டோர்ஸ் இசைத்தட்டு நிறுவனத்தில் வாய்ப்புக் கேட்டு கிடைக்கப்பெறாததால் ஒரு மாதத்திற்கு மேல் நடையாய் நடந்து பின்னர் ஒரு வழியாக அவர்களின் அறிவுறுத்தலின் படி வாணி மகாலில் நிகழ்ச்சியொன்றில் பாடினார். அதைக் கேட்ட எச்.எம்.வி.நிறுவனம் இசைத்தட்டில் இவரைப் பாடவைத்து வெளியிட ஒப்பந்தம் செய்தனர்.

இவர் பி.ஏ. பட்டப்படிப்பை தமிழ்நாட்டில் திருச்சியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்றார். அப்போது அந்த 3 வருடங்களிலும் இவர்தான் அக்கல்லூரியில் நடத்தப்பட்ட நாடகங்களில் கதாநாயகனாக நடித்தார். யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட ‘பாச நிலா’ வில் இவர்தான் கதாநாயகன். தமிழ்நாட்டிற்கு வந்த பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. முதல் படம் ‘டூஃபான் மெயில்’ என்ற தெலுங்குப் படம். இவரது சிகை அலங்காரத்தைக் கவனித்த இயக்குநர் அப்படத்தில் ஒரு வெளிநாட்டுக் கடத்தல்காரனாக நடிக்க இவருக்கு வாய்ப்பளித்தார்.

அதன்பின் மலையாளத்தில் சந்திரகுமார் இயக்கத்தில் ‘தடவரா’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து மலையாளத்தில் ’மாமாங்கம்’ என்ற படத்தில் கே.ஆர்.விஜயாவின் முறைப்பையனாக நடித்தவர் ‘சக்தி’,  ‘கழுகன்’, நடிகர் ஜெயனுடன் ‘ஆவேசம்’, ’கோளிளக்கம்’ போன்ற படங்களிலும் நடித்தார். நடிகர் ஜெயனின் நெருங்கிய நண்பராக இருந்த மனோகர் அவருடன் ஏராளமான படங்களில் நடித்தார். சென்னையில் படப்பிடிப்புக்காக வரும்போதெல்லாம் ஜெயன் இவருடைய வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். கோளிளக்கம் படப்பிடிப்பின்போது தனது உற்ற நண்பனான நடிகர் ஜெயனின் அகால மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திரையுலகையே வெறுத்து இலண்டனுக்குச் சென்றவர் அங்கு பி.பி.சி-யில் பணியில் சேர்ந்தார். 9 வருடங்கள் இலண்டனில் இருந்தார். பின்னர் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். ‘துருப்பு குலாம்’ என்ற மலையாளப் படம்தான் இவரது மறு வரவுக்கு ஆரம்பமாகயிருந்தது.

தமிழில் காஷ்மீர் காதலி, தீ, அதே கண்கள்,  ராஜா நீ வாழ்க, காட்டுக்குள்ளே திருவிழா , உலகம் சுற்றும் வாலிபன், நீதிபதி, லாரி டிரைவர் ராஜாகண்ணு, காதல் கொண்டேன், பாண்டித்தியம் போன்ற சுமார் 75-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு மனைவியும் மூன்று மக்களும் உள்ளனர். மனைவி இலங்கையில் கல்லூரி முதல்வராகவும் கலா மேரி, செல்வமேரி என்ற இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு லண்டனில் ஏர்கிராஃப்ட் மானேஜ்மெண்டிலும் மற்றவர் இலங்கையில் ‘கால்’ என்ற இடத்தில் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறையில் தலைமைப்பொறுப்பிலும் உள்ளார்கள். டங்க்ஸ்டன் பாபு என்ற ஒரே மகன் கத்தார் நாட்டில் முதன்மைப் பொறியியலாளராக உள்ளார். இம்மூவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர்.

சுராங்கனி பாடலை இந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், தமிழ், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார்.

 


Add new comment

Or log in with...