தனிமையிலிருந்த பெண் கொலை; வீட்டிற்கு அருகில் இரு சைக்கிள்கள் மீட்பு | தினகரன்

தனிமையிலிருந்த பெண் கொலை; வீட்டிற்கு அருகில் இரு சைக்கிள்கள் மீட்பு

 

பாலாவி ரத்மல்யாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவர் கூரிய ஆயுதமொன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தற்போது பாலாவி ரத்மல்யாய 08 ஆம் குறுக்குத் தெருவில் வசித்து வந்தவருமான மதுரை புவனேஸ்வரி (61) என்பவரே இவ்வாறு படுகெலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் நீர்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற குறித்த பெண், தற்போது புத்தளம் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். பாலாவி ரத்மல்யாய எட்டாம் குறுக்குத் தெருவில் வசித்து வந்த அந்த பெண்ணின் வீட்டில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணும், அவரது மூத்த சகோதரியுமே வாழ்ந்து வந்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரி தேவை நிமித்தம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மன்னாருக்குச் சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் அந்த வீட்டில் குறித்த வயோதிபப் பெண் மாத்திரமே தனிமையில் இருந்துள்ளார் எனவும் அவருக்கு அயலவர்களே உதவியாக இருந்து வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை (20) நண்பகல் புத்தளம் நகருக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வந்த குறித்த வயோதிபப் பெண், தனது வீட்டின் பிதான முன் வாசல் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டில் பகல் உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, மன்னாரில் உள்ள உறவினர்கள் குறித்த பெண்ணின்; கைத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் இதன்போது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் எதுவும் கிடைக்காமையினால் இதுபற்றி அவர்கள் புத்தளத்தில் உள்ள மற்றைய உறவினர் ஒருவரிடம் தெரிவித்ததுடன், வயோதிபப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று தேடிப் பார்க்குமாறும் கூறியுள்ளனர்.

இதனையடுத்தே, குறித்த வயோதிபப் பெண்ணின் உறவு முறைக்காரரான ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிமை நண்பகல் அந்த வீட்டுக்குக் சென்று பார்த்துள்ளார்.

இதன்போது, வீட்டின் பிரதான முன் வாசல் கதவு பூட்டப்பட்டிருப்பதையும், வீட்டின் இரண்டு யன்னல்கள் திறந்து நிலையில் காணப்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளார்.

இதன்போது சந்தேகம் கொண்ட குறித்த நபர், இதுபற்றி அயலில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், அந்த மக்களின் உதவியுடன் வீட்டின் மதில் மீது ஏறி வீட்டு வளவுக்குள் சென்றுள்ளதுடன், திறந்து கிடந்த யன்னல்கள் ஊடாக பார்த்துள்ளார்.

இதன்போது வீட்டுக்குள் அறைகளில் இருந்த அலுமாரிகள் திறந்து கிடப்பதையும், பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்துள்ளதையும், அந்த வீட்டின் சமயலறைக்குள் குறித்த வயோதிபப் பெண் அந்த இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (20) நண்பகல் வேளை மூவர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்து தாங்கள் இந்தப் பகுதியில் மேசன் தொழில் செய்ய வந்துள்ளதாகக் கூறி, குறித்த பெண்ணிடமிருந்து குடிப்பதற்காக போத்தல் ஒன்றில் குடிநீர் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தலைமையிலான பொலிஸாரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், சம்பம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டு கொலை இடம்பெற்ற வீடு மற்றும் அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தெரிவித்தார்.

அத்தோடு, கொலை இடம்பெற்ற வீட்டிலிருந்து சந்தேகத்திற்கு இடமான ஒருசோடி பாதணிகளும்; மீட்கப்பட்டுள்ளதுடன்,  குறித்த வீட்டிலிருந்து சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குள் இருந்து ஒரே நிறத்தைக் கொண்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகளும் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் பயன்படுத்தி கொலைக் குற்றவாளிகள் இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும்; கொலை சம்பவத்தின் பின்னர் அவர்கள் வேறு வாகனங்களில் தப்பிச்சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.எம்.எஸ்.அப்துல் காதர், சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் இதுதொடர்பான அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக்  குறிப்பிட்ட பொலிஸார், கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் கண்டரிவதற்கு பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ஸ்ரீவர்தனவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேனவின் வழிகாட்டலில் புத்தளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நானயக்காரவின் மேற்பார்வையில் புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தனவின் தலைமையிலான பொலிஸ் குழுக்கள் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த படுகொலைச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் மாத்திரமின்றி, அதனைச் சூழவுள்ள பிரதேசத்திலும் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் - றஸ்மின் மொஹமட், புத்தளம் விஷேட நிருபர் - எம்.எஸ். முஸப்பிர்)

 


Add new comment

Or log in with...