Home » கிராமப் புற யுவதிகளை தொழில்வாய்ப்பு முயற்சியாளர்களாக உள்வாங்கும் திட்டம்
முறைசாரா மற்றும் வாழ்நாள் கல்விக்கூடாக

கிராமப் புற யுவதிகளை தொழில்வாய்ப்பு முயற்சியாளர்களாக உள்வாங்கும் திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுப்பு

by damith
November 6, 2023 10:04 am 0 comment

இலங்கையில் முதல் தடவையாக முறைசாரா மற்றும் வாழ்நாள் கல்விக் கூடாக கிராமப்புற யுவதிகளை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் வேலைத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டின் தன்னார்வ நிதி வழங்கும் சர்வதேச டிவிவி நிறுவனம் இலங்கையில் முதன் முதலாக இந்தத் திட்டத்தை அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் ஊடாக அமுல்படுத்துவதாக நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 15 சுய தொழில் முயற்சியில் ஈடுபடும் யுவதிகளும் பெண்களும் ஆடை உற்பத்தித் தொழில்துறையில் ஈடுபடவுள்ளனர்.

அதற்கிணங்க ஆடை உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார அபிவிருத்தி செயலமர்வொன்று (02) வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து அங்கு தொழில் முயற்சியாளர்களான யுவதிகள், பெண்கள் மத்தியில் உரையாற்றிய அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா, முறைசாரா வாழ்நாள் கல்வியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள இளம் பராயத்தினர் பிரயோக அறிவாற்றல் கல்வியைப் பெற்று சமூக பொருளாதார மேம்பாட்டை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டு இந்த செயல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதுவொரு முன்னோடித் திட்டமாகும். இதன் சாத்தியப்பாடுகள் பொருளாதார மேம்பாட்டுக்கான வெற்றியாக அமையும் பொழுது இந்தத் திட்டம் மேலும் விஸ்தரிக்கப்படும் சாத்தியமுள்ளது.

ஒருங்கிணைந்த சமூக நிறுவனமாக இந்த ஆடையுற்பத்தித் தொழிலில் ஈடுபடுவோர் வறுமைப்பட்ட நிலையிலிருந்து பல்வேறு அபிவிருத்திகளை அடைந்து கொள்ள முடியும்.

அறிவாற்றல் திறன் சார்ந்த தொழில் முயற்சிக் கல்வியும் அதனூடாக பொருளாதார வளர்ச்சியையும் அடைந்து கொள்ளலாம் என்பதை இத்திட்டம் அனுமானிக்கின்றது. உள்ளூரிலேயே நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய வாழ்நாள் அபிவிருத்தியை நீங்கள் அடைந்து கொள்ளலாம். தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஊடாக சிறந்த சந்தை வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இம் முறைசாரா வாழ்நாள் கல்வித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட யுவதிகள் பெண்களுக்கான தொழில் முயற்சியாளர் வியாபார மேம்பாட்டுப் பயிற்சிகளை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி என். லோகேஸ்வரன், வவுணதீவுப் பிரதேச செயலக தொழில் வழிகாட்டல் உதவி அலுவலர் எல். கமலநாதன் ஆற்றல் அபிவிருத்தி அலுவலர் என். சிவநாதன் ஆகியோர் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT