ஆணை மீறி சென்றதால் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி | தினகரன்

ஆணை மீறி சென்றதால் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி

 

- பிரதேசவாசிகள் அமைதியின்மை; கண்ணீர்ப்புகை தாக்குதல்

- பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

கதிர்காமம் நகர் பகுதியில் பொலிசாரின் ஆணையை மீறி சென்றவர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) இரவு 10.55 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குறித்த சம்பவத்தில் கதிர்காமம் நாகஹ வீதியைச் சேர்ந்த 44 வயது  நபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபர், கதிர்காமம் கந்த வீதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கதிர்காமம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரினால் நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டள்ளதாகவும், இதன்போது குறித்த நபர் அவர்களது உத்தரவை மீறி சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குறித்த நபரின் மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர், கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பிரதேசத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டதோடு, இன்று (21) அதிகாலை 1.00 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பிரதேசவாசிக பொலிஸ் நிலையத்தின் யன்னல் கண்ணாடிகள் மற்றம் பொலிசாரின் வாகனங்கள் மீது கல் வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இறந்தவரின் மனைவி, பிள்ளை

இறந்தவரின் மனைவி, பிள்ளை

இதனையடுத்து, குறித்த நபர்களை அங்கிருந்து அகற்றுவதற்காக கண்ணீர் புகை தாக்குதல்களை மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

தற்போது குறித்த பிரதேசம் அமைதிக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் கீழ், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

(படங்கள் : கே.டி. தேவப்பிரிய)

 


Add new comment

Or log in with...