கோடரித் தாக்குதல்; 3 வயது குழந்தை பலி; தாய் வைத்தியசாலையில் | தினகரன்

கோடரித் தாக்குதல்; 3 வயது குழந்தை பலி; தாய் வைத்தியசாலையில்

 

சந்தேகநபர் நஞ்சருந்தி தற்கொலை

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் தனது தாயாரையும், தம்பியின் மூன்றே வயதான மகளையும் கோடரியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட நபர், நஞ்சருந்தி தனது  உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இச் சம்பவம் யாழ்  வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில்  இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குழந்தை  உயிரிழந்துள்ளதுடன், குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில்  யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இன்று (19) காலை குறித்த வீட்டில் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் பெண் குழந்தை மீது கொடூரமாக கோடரியால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன், கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் தாய் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஈஸ்வர், நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் தனுசன் நிக்சையா (03) எனும் குழந்தையும் சந்தேகநபரான ஈஸ்வர் (33) என்பவருமே உயிரிழந்துள்ளனர். பரமேஷ்வரி (55) என்பவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...