அதிபரை மண்டியிட செய்த குற்றம்; விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு | தினகரன்

அதிபரை மண்டியிட செய்த குற்றம்; விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

 

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பந்த தசநாயக்கவினால் பதுளை மாவட்ட பாடசாலை ஒன்றின் அதிபருக்கு தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிடப்படும் விடயம் குறித்தும் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கேற்ப அது தொடர்பாக விரிவான விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விசாரணையை பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்வதற்கு ஊவா மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கைகளை ஊவா மாகாண ஆளுநரின் கீழ் கொண்டு வருமாறும் ஜனாதிபதி ஊவா மாகாண ஆளுநருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பக்கச்சார்பற்ற விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிடச் செய்தததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அறிக்கையொன்றை கோரியுள்ளதாக  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபையின் கீழ் இயங்கும் பாடசாலை என்பதால், கல்வியமைச்சினால் நேரடியாக தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர், இது தொடர்பில் தம்மால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சுட்டிக் காட்டினார்.

இதே வேளை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தனது மாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்துடன், தனது இராஜினாமா கடிதத்தை மாகாண ஆளுநருக்கு இன்று (21) காலை அனுப்பியதாக தெரிவித்த அவர், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணைகள் நிறைவடையும் வரை, தாம் மாகாண கல்வியமைச்சர் பதவியை விட்டு விலகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவி ஒருவரை பாடசாலையில் அனுமதிக்காமை தொடர்பில், ஊவா மாகாண சபை கல்வி அமைச்சின் செயலாளரின் உத்தரவுக்கமைய, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாலிடச் செய்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவ்வாறான விடயம் ஒன்று இடம்பெறவில்லை என, குறித்த பெண் அதிபர் தெரிவித்தபோதும் பின்னர் நேற்று முன்தினம் (19), தான் முதலமைச்சர் முன்னால் முழந்தாலிட நேர்ந்ததாக தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில், முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆசிரியர்கள் சங்கம் நேற்று (20) அறிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்று (21) காலை குறித்த பாடசாலை அதிபர், பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...