அஞ்சலோ மெத்திவ்ஸ் தொடை உபாதைக்கு உள்ளாகிய காரணத்தினால் பங்களாதேஷ் அணியுடனான ஆட்டத்திற்கு இலங்கை அணியினை தினேஷ் சந்திமால் வழிநடாத்தினார். இதன் மூலம் கடந்த ஆறு மாத காலப்பகுதியினுள் இலங்கை ஒரு நாள் அணியின் தலைவர் பதவியினை பொறுப்பேற்ற 6ஆவது வீரராக சந்திமால் மாறுகின்றார்.அத்துடன் இலங்கை அணியின் தலைவர் மெத்திவ்ஸ் இரண்டு போட்டிகளில் ஆட்டமாட்டார் என இலங்கை கிரிக்கெட் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி நேற்றைய ஆட்டத்தில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. மெத்திவ்சுக்குப் பதிலாக நிரோஷன் திக்வெல்ல அணிக்குள் அழைக்கப்பட்டார், வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீரவின் இடத்தினை நுவான் பிரதீப் ஈடு செய்தார்.
பங்களாதேஷ், சிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்குபெறும் முக்கோண ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி டாக்காவில் ஆரம்பமானது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார் அதன் படி பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பாக தமிம் இக்பால் 84 ஓட்டங்களையும் சஹீப் அல்-ஹசன் 67 ஓட்டங்களையும் அனாமுல் ஹக் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திஷர பெரேரா 3 விக்கெட்டையும் பெர்னாண்டோ 2 விக்கெட்டையும் தனஞ்சய ,குணரத்தன தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Add new comment