மஹரகம நகரசபை நிராகரிப்புக்கு எதிரான மனுவும் நிராகரிப்பு | தினகரன்

மஹரகம நகரசபை நிராகரிப்புக்கு எதிரான மனுவும் நிராகரிப்பு

 

உச்சமன்று நேற்று தீர்ப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மஹரகம நகர சபைக்கென தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கை பொதுஜன பெரமுன தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

பிரதம நீதியரசர் பிரியசத் தெப், நீதிபதி புவனேக்க அளுவிஹார மற்றும் நீதிபதி நளின் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகளடங்கிய குழுவே இந்த மனுவை நிராகரித்துள்ளது.

மனு தொடர்பில் தீர்ப்பு வழங்குவதற்கு உரிய காரணங்கள் இல்லாமையினால் மூவரடங்கிய நீதிபதிகள் குழு நேற்று இந்த வழக்கை விசாரணை செய்யாமலேயே நிராகரித்தது.

இலங்கை பொதுஜன பெரமுன மஹரகம நகரசபைக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளூராட்சித் தேர்தல் சட்ட விதிகளுக்கமைய 28வது பிரிவிலுள்ள (2அ) உப பிரிவில் பெண் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும் இலங்கை பொதுஜன பெரமுன மஹரகம நகர சபையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக இடைக்கால தடையுத்தரவுக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இலங்கை பொதுஜன பெரமுன ஆறு உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் தேர்தல்கள் உதவி ஆணையாளர் (கொழும்பு மாவட்டம்), தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிலுள்ள மேலும் இரண்டு உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இன்னும் பலரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஜர டி சில்வா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க வித்தாரண ஆகியோரும் தேர்தல் ஆணைக்குழு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விவேக்க சிறிவர்தனவும் பங்குபற்றினர். 

 


Add new comment

Or log in with...