மாணவரிடமிருந்து கற்றுக் கொள்வோம்! | தினகரன்

மாணவரிடமிருந்து கற்றுக் கொள்வோம்!

 

அரசியல்வாதிகள் பாடசாலை மாணவர்களிடமிருந்து நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் படிக்க வேண்டுமென தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் நடைபெறும் கூத்துக்களையிட்டு நாம் வெட்கப்பட வேண்டியுள்ளதாகவும், இந்த அசிங்கங்களை பள்ளி மாணவர்களையும் அழைத்து வந்து காண்பிப்பது அதைவிடக் கேவலமானதெனவும் அமைச்சர் மனோ- விசனப்பட்டிருக்கிறார். தான் இது விடயம் தொடர்பாக சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்று முன்தினம் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மனோகணேசன் மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். எமது நாட்டு அரசியல் செயற்பாடுகளை பார்க்கும் போது ‘சாக்கடை அரசியல்’ என்ற கருத்து மெய்ப்பிக்கப்பட்டதொன்றாகவே நோக்க வேண்டியுள்ளது. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை கடந்த நிலையிலும் ஜனநாயக அரசியல் என்பது எவரிடமும் காணப்படாதவொரு நிலைமையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஏகாதிபத்திய அதிகார வர்க்கத்திடமிருந்து சாத்வீகப் போராட்டத்தின் மூலம் நாடு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து ஜனநாயக ஆட்சி முறையை எமது தலைவர்கள் முன்னெடுத்தனர். அன்று சுதந்திரமடைந்த முதல் நாளன்று தேசபிதா டி.எஸ். சேனாநாயக்க உதிர்த்த வாசகங்கள் இன்னமும் எமது செவிகளுக்கு எட்டிக் கொண்டே இருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் எனப் பிளவுபட்டுக் கொண்டிராமல் அனைவரும் இலங்கையர் என்ற மன நிலையில் செயற்பட வேண்டும் என அன்று அவர் குரல் கொடுத்தார். ஒற்றுமை என்ற வாசகமே எமது தாரக மந்திரமாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

ஆனால், மக்கள் ஒன்றுபட முனைகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் சக்திகள் மக்களை பிரித்தாளும் போக்கிலேயே செயற்பட்டு வந்துள்ளன. கட்சி அரசியல் மக்களின் மத்தியில் முரண்பாட்டைத் தோற்றுவித்தது. நாம் சுதந்திரமடைந்த பின்னர் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட பல நாடுகள் எம்மை முந்திக் கொண்டு முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. நாம் இன்னமும் பின்தங்கிய நிலைக்கே தளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அன்று சிங்கப்பூர் இலங்கையை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டது. இன்று சிங்கப்பூர் நாம் மூக்கில் விரல் வைத்துப் பார்க்குமளவுக்கு முன்னேறியுள்ளது.

இதற்கான பிரதான காரணம் எமது நாட்டு அரசியல் போக்குகளேயாகும். கட்சி அரசியலால் மக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளனர். தேசிய அரசியல் கோட்பாடு எந்தவொரு கட்சியிடமும் காணப்படவில்லை இன, மத, மொழி ரீதியில் நாட்டு மக்கள் பிளவுபட்டுப் போயுள்ளனர். அரசியல் சக்திகள் தமது அரசியல் சுயநலனுக்காக மக்களை பிளவுபடுத்தினர். ஜனநாயகம் என்பது இருட்டறைக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவே நோக்க வேண்டியுள்ளது. இங்கு இனவாத அரசியலே தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்றது.

போதிய அரசியல் அறிவோ, சிந்தனைவாதிகளோ மக்கள் பிரதிநிதிகளாக தெரிவாவதில்லை. பணம் அரசியல் களத்தில் நீரோட்டமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ஜனநாயக அரசியல் கோட்பாடுகளை தெரிந்து கொள்ளாதவர்களே கூடுதலாக பாராளுமன்றத்தில் காலடி வைத்துள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்குத்தான் அரசியல் விஞ்ஞானம் தெரியும் என்பது கேள்விக்குறியாகும்.

இன்று பாராளுமன்றத்தில் என்ன நடக்கின்றது. பைத்தியக்கார விடுதிகள் போன்று உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர். அங்கு பேசப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் கூட இங்கிதமானதாக காணப்படவில்லை. இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பாராளுமன்ற ஜனநாயகம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டதோ. அன்று முதலே இது ஆரம்பித்துவிட்டது. ஆனால் அண்மைக் காலத்தில் அது மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. போதாக் குறைக்கு இன்று பாடசாலை மாணவர்களுக்கு சபை அமர்வுகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கின்ற போது இளைய சந்ததியினரின் மனநிலை எவ்வாறாக இருக்கும் என்பதை நாம் ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இவற்றைக் கொண்டுதான் அமைச்சர் மனோ கணேசன் தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். இன்று எமது நாட்டில் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையே நல்லிணக்கமும் சகவாழ்வும் மேலோங்கி காணப்படுகின்றது. எமது இளைய சந்ததியினர் இனம், மதம், மொழி கடந்து சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அனைவரும் ஒரே வகுப்பறைக்குள்ளும், மைதானத்திலும் ஒன்றாக கரம் கோத்து மகிகழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். அவர்களிடையே சகோதரத்துவமும், நட்புறவும் மேலோங்கிக் காணப்படுகின்றது. இத்தகைய சகவாழ்வு, நல்லிணக்கப் பாடத்தை எமது அரிசயல்வாதிகள் அவர்களிடமிருந்து படிக்க வேண்டும்.

இன ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கம் என்பது குறித்து பல தசபாப்தங்களாக நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். அதற்கான கருத்தரங்குகளும், செயலமர்வுகளும் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், எமது கிராமங்களில் பாடசாலைகளுக்குள் இந்த நல்லிணக்கமும், சகவாழ்வும் மேலோங்கிக் காணப்படுவதை எவரும் கண்டு கொள்ளவில்லை. மாதம் ஒருதடவையாவது கிராமத்துப் பாடசாலைகளுக்கு இந்த அரசியல் வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் செல்ல வேண்டும் குறைந்தது ஒருநாள் அந்தச் சின்னஞ் சிறுவர்களுடன் இருந்தால் நிறையவே படித்துக் கொள்ள முடியும்.

அமைச்சரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் சாதகமாக சிந்தித்து எமது பெரியவர்கள் முதியவர்களிடமிருந்தாவது பாடம் படிக்க வழி செய்தால் எதிர்காலத்திலாவது பாராளுமன்றத்தின் தூய்மையை பாதுகாத்துக் கொள்ள முடியும். இன்றேல் “சாக்கடை அரசியல்” என்ற முத்திரையை ஊன்றிப்பதிய வேண்டிய நிலையே ஏற்படலாம் என்பதை மறந்துவிடக் கூடாது.


Add new comment

Or log in with...