சளி பிரச்சினை; தவிர்க்க வேண்டிய உணவுகள்! | தினகரன்

சளி பிரச்சினை; தவிர்க்க வேண்டிய உணவுகள்!

 

‘மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும்; தைப் பனியில் தரையும் குளிரும்' என்பது முன்னோர்கள் வாக்கு. இதை மெய்ப்பிப்பதுபோலவே, அந்தி சாயும் வேளையில் தொடங்கும் குளிர், அதிகாலை வரை மக்களை நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அடிக்கிற வாடைக்காற்றில் குளிர் நேரடியாக, நம் காது, மூக்கு, தொண்டையைத்தான் அதிகம் பாதிக்கிறது.

என்னதான் கம்பளி, மப்ளர் என மூகமுடி போட்டுக்கொண்டாலும், குளிர் நம்மை எளிதில் விடுவதாக இல்லை. விளைவு, சளி, காய்ச்சல் போன்றவற்றால் நிறைய அவஸ்தைப்படுகிறோம். ஒரு பக்கம் சளிக்கு மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு பக்கம் கண்ணில்படும் உணவுகளையெல்லாம் உள்ளே தள்ளிக்கொண்டிருப்போம். காய்ச்சல் நேரத்தில் எப்படிக் குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்களோ அதேபோல, சளிப் பிடித்தாலும், உணவில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், ‘சில உணவுகள் இந்தப் பிரச்னையை இன்னும் தீவிரமாக்கும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும். சளிப் பிடித்திருக்கும்போது சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன? பார்க்கலாமா?

பால்

பால் பொருள்கள்

பால் பொருள்களைச் சளி பிடித்திருக்கும் நேரத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது சளியின் அளவை அதிகரித்து, நோய்க்கிருமிகளின் தாக்கத்தையும் அதிகரிக்கச் செய்துவிடும். செரிமானமாகவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதேநேரத்தில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருள்களை உட்கொள்ளலாம். அதிலும், பாலுடன் மஞ்சள் பொடி, சேர்த்துச் சாப்பிடலாம்.

துரித உணவுகள்

சளி, காய்ச்சலின்போது பசி எடுக்காது; சுவை தெரியாது. இதனால், வழக்கமான உணவு சாப்பிட விருப்பம் இருக்காது. இதனால், மற்ற நாள்களைவிட துரித உணவுகள் மேல் நாட்டம் செல்லும். ஆனால், துரித உணவுகளில் ஊட்டச்சத்துகள் கிடைக்காது. அதோடு கலோரிகள் அதிகம் இருக்கும். மேலும், உணவில் நிறம், சுவையைக்கூட்ட செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள், மோனோசோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) போன்றவை அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். இது போன்ற உணவுகளை உடல்நிலை சரியில்லாத காலத்தில் சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசத்தை அது குறைத்துவிடும்; கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைத்துவிடும். எனவே, துரித உணவுகளைத் தவிப்பது சிறந்தது.

ஜிலேபி

சர்க்கரை உணவுகள்

ரீஃபைண்டு செய்யப்பட்ட சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகள், பதப்படுத்தப்பட்ட பொருள்கள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பழச் சாறுகள், மிட்டாய்கள் போன்றவற்றில் சர்க்கரை அதிகமிருக்கும். இவை, சளி மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் பாக்டீரியாவைச் சமாளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் குறுக்கிடும். எனவே, அதிக சர்க்கரை உட்கொண்டால், அது கபத்தை அதிகரிக்கச் செய்யும். இது, நோயை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களின் திறனைக் குறைத்துவிடும். மேலும், கிருமிகள் வளர வளமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். குறிப்பாக, பழச்சாறுகள் குடித்தாலும் அதனுடன் சர்க்கரை சேர்க்க வேண்டாம். இனிப்புத் தேவையெனில் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இயற்கைச் சர்க்கரை மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சளிப் பிடித்திருக்கும்போது சாப்பிடலாம்.

பாஸ்ட் ஃபுட்

இறைச்சி உணவுகள்

சளி, காய்ச்சல் இருக்கும்போது இறைச்சி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடலின் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் அந்தச் சமயத்தில் இறைச்சி போன்ற அதிக கலோரி உள்ள உணவைச் சாப்பிட்டால் அவை செரிமான மண்டலத்தை பாதிக்கும். சைவ உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதால், அவை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்துப் போராடும். இறைச்சிகளில் அசிடிட்டி அளவு அதிகமாக இருப்பதால், அது உடலில் உள்ள இயற்கை அமிலங்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். இதனால் உடலில் அசிடிட்டியின் அளவு, உட்காயங்கள் அதிகரிக்கும். எனவே, அமில உணவுகளையும் சளி பிடித்திருக்கும்போது சாப்பிடக் கூடாது.

ஆல்கஹால்

ஒரு பெக் ரம், பிராந்தி போன்றவற்றைக் குடித்தால், எப்பேர்பட்ட சளியும் நீங்கும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது, குளிர்காலத்திலும் சளி பிடித்திருக்கும் நேரத்திலும் தொண்டைக்கு ஒருவகையில் இதம் கொடுப்பதுபோல இருக்கும். அது தற்காலிக நிவாரணம்தான். உண்மையில், ஆல்கஹால் பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவோடு, காய்ச்சலும் அதிகரித்துவிடும்.

ஜங்க் புட்

எண்ணெயில் வறுத்த உணவுகள்

எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளிலும், கொழுப்பு நிறைந்த உணவுகளிலும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கும். அவை வயிற்று உபாதைகளைக் கொடுக்கும். அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கும். எனவே, ஃபிரைடு சிக்கன், ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் போன்ற பொரித்த உணவுகளையும், ஜங்க் உணவுகளையும் சளிப் பிடித்திருக்கும்போது தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்கள்

சளிப் பிடித்திருக்கும்போது வெந்நீர் அல்லது சூடான பானங்களைப் பருகினால் அதன் நீராவி மூக்கின் நாசிகளைத் திறந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கச் செய்யும். அதேநேரத்தில் குளிச்சியான பானங்களைப் பருகினால் அது தொண்டைப்புண்ணை ஏற்படுத்தும் அல்லது தொண்டைப்புண் இருந்தால், அதை அதிகரிக்கச் செய்யும். எனவே, குளிர்பானங்களையும்ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

உடலை கதகதப்பாகவைத்திருக்கும் ஆடைகளை அணிவதும், மிதமான சூடுள்ள நீரில் குளிப்பதும் சளியிருக்கும் காலங்களில் அந்தப் பிரச்னையை எதிர்கொள்ள உதவும்.


Add new comment

Or log in with...