டீசலில் மண்ணெண்ணெய்; நாவல எரிபொருள் நிலையத்திற்கு சீல் | தினகரன்

டீசலில் மண்ணெண்ணெய்; நாவல எரிபொருள் நிலையத்திற்கு சீல்

 

உரிமம் பத்திரம் பறிமுதல்; கலப்படம் செய்தால் அறிவிக்க இலக்கம்

டீசலில் மண்ணெண்ணெய் கலந்தமையால் நாவல எரிபொருள் நிலையம் நேற்று (18) புலனாய்வுப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டு உரிமம் பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு இராஜகிரிய வீதியில், திறந்த பல்கலைகழகம் அருகாமையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையமே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.

டீசல் எரிபொருளில் மண்ணெண்ணெய்க் கலப்பதானது சட்டவிரோதமானதாகும்.

நாவல எரிபொருள் நிலையத்தில் டீசல் எரிபொருள் கொள்கலனில் மண்ணெண்ணெய் கலந்தமை தொடர்பாக புலனாய்வுப்பிரிவினர் கண்டறிந்துள்ளனர். கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன் ஒன்றை வேறு ஒரு இடத்துக்கு கொண்டுசெல்ல முயற்சித்துள்ளனர். இதனை உறுதிசெய்த புலனாய்வுப் பிரிவினர் இன்று இந்த எரிபொருள் நிலயத்தைதை முற்றுகையிட்டு சீல் வைத்து உரிம பத்திரத்தை இரத்துசெய்துள்ளனர்.

டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விநியோகித்தால் உடனடியாக எரிபொருள் விநியோக உரிமம் ரத்துச் செய்யப்படும் மற்றும் அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள அதிகாரத்திற்கமைய டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனைக்காக கொண்டுசெல்லப்படும் எரிபொருள் கொள்களணின் (பெற்றோல் டீசர் பவுசர்) உரிமம் பத்திரம் மற்றும் எரிபொருள் நிலையத்தின் உரிமம் பத்திரம் ஆகியவற்றை ரத்துச் செய்வதற்கான சகல நடவடிக்கைளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இதுபற்றி தெரிவிக்கையில்,

'டீசலில் மண்ணெண்ணெய் கலப்பது தொடர்பாக நாட்டின் பலபாகங்களில் இருந்து பல முறைபாடுகள் வந்துள்ளன. குறிப்பாக மண்ணெண்ணெய் விலை மிககுறைந்தளவில் விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பாக பஸ்வண்டிகளுக்கு டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் கலந்த டீசலையே பயன்படுத்துகின்றனர். இதனால் சிலர் எரிபொருள் விநியோகத்தில் இலாபம் பெற்றுவருகின்றனர். இதன் விளைவாக மக்களுக்கும் கூட்டுத்தாபனத்திற்கும் பாரிய நட்டம் ஏற்படுகின்றது.

இதுதொடர்பாக பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சும் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இவ்விடயம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. இவ்வாறான விடயங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளது.

மேலும் எனது அமைச்சும் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இதுதொடர்பாக கண்காணிக்கவும் விசாரனைகளை மேற்கொள்ளவும் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

தற்போது பரிசோதனையின் மூலமாக கலப்படம் நிரூபிக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதற்கு நல்ல உதாரணமாக நாவுல எரிபொருள் விநியோக நிலையத்திற்கு எரிபொருள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல குருநாகல் எரிபொருள் விநியோக மத்திய நிலையத்தில் டீசல் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருக்கையில் அதில் மண்ணெண்ணெய் கலந்த உடுகம்பொற பந்தன (பவுசர்) கொள்களனின் எரிபொருள் விநியோக உரிமம் பத்திரம் இரத்துசெய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மண்ணெண்ணெய் விலையில் லீட்டருக்கு ரூபா 26 பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு
நட்டம் ஏற்படுகின்றது.

ஆனால் நட்டம் ஏற்பட்டாலும் மக்களுக்கு மானியமாக கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய்யை விநியோகம் செய்துவருகின்றது. மக்களுக்கு கிடைக்கும் இந்த மானியத்தை பயன்படுத்தி சில வியாபாரிகள் தமது இலாப நலனுக்காக டீசலில் மண்ணெண்ணெய்யை கலக்கின்றனர்.

ஆகவே இதனை தடுப்பதற்கு பல திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம்' என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், எரிபொருளில் கலப்படங்கள் செய்து விற்பனை மேற்கொள்வது  தொடர்பாக தெரியவந்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கவும் மேலும் 0728870624 மற்றும் 0777748417 ஆகிய இலக்கங்களுக்கு தெடர்பை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...