ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றிற்கு கையளிப்பு | தினகரன்

ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றிற்கு கையளிப்பு

 

 திறைசேரி பிணைமுறி
 பாரிய நிதி மோசடி

திறைசேரி பிணைமுறி விநியோக சர்ச்சை குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் பற்றிய விவாதங்கள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் கூடி தீர்மானிக்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து குறித்த விசாரணை அறிக்கைகளை கையேற்ற பின்னர் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த அறிக்கைகள்  23ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது சமர்ப்பிக்கப்படும் எனக் கூறினார். ஜனாதிபதி செயலகத்தின் சட்ட அதிகாரி முதித்ததிசாநாயக்க, பிணைமுறி குறித்த விசாரணை அறிக்கையின் 26 பிரதிகளையும், பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 34 தொகுதி அறிக்கைகளையும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் நேற்று கையளித்தார்.

1,400 பக்கங்களைக் கொண்ட பிணைமுறி விசாரணை அறிக்கை ஆங்கில மொழியில் மாத்திரம் தற்சமயம் கையளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 10,000 பக்கங்களைக் கொண்டிருப்பதுடன், இவை சிங்கள மொழியில் காணப்படுகின்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய , "நிலையியற் கட்டளைக்கு அமைய அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் சமர்ப்பிப்பதே பாராளுமன்றத்தின் வழமையாகும். எனவே மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கைகளின் பிரதிகள் கூடிய விரைவில் தேவைப்படுவதாக ஜனாதிபதி செயலகத்திடம் அறிவித்துள்ளோம். அரச கரும மொழிகள் திணைக்களத்திலிருந்து மொழிபெயர்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி செயலகம் உறுதியளித்துள்ளது" என்றார்.

பிணைமுறி விசாரணை அறிக்கை உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய, அரசாங்க அச்சகரைச் சந்தித்து பிணை முறி விசாரணை அறிக்கையை 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் 300 பிரதிகளை விரைவில் அச்சிடுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அதேநேரம், பாரிய மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் ஒரு பிரதி மாத்திரமே கிடைத்திருப்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்ப மேலும் பிரதிகள் கோரப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

டிஸ்னா முதலிகே 


Add new comment

Or log in with...