ஐ.தே.கவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் | தினகரன்

ஐ.தே.கவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார பேரணி இன்று கண்டி நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மட்டத்திலான பிரசார நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கண்டி நகரில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டேயில் உள்ள ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (17) ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நடைபெற்றது. இங்கு ஊடகங்களுக்கு விளக்கமளித்த ஐ.தே.க பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ்மட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய ரீதியிலான தேர்தல் பிரசார பேரணி இன்றுமுதல் கட்சியின் தலைவரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கடந்த இரண்டு வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தி வந்தது. எனினும் ஒரு சில அரசியல் சக்திகள் தங்களது அரசியல் சுயலாபங்களுக்காக தேர்தலை வெற்றிகொள்வதற்கான சிறந்த தருணத்தை எதிர்பார்த்து, தேர்தல் புதிய முறையில் நடத்தப்படும் எனக் கூறி தேர்தலை தாமதப்படுத்தின.

இது தொடர்பில் நாம் கவலையடைகிறோம். தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக காணப்பட்டது. நாம் 20 வருடங்களாக எதிர்கட்சியில் இருந்தோம். எங்களுக்கு கடினமான காலத்திலும் கூட நாம் தேர்தல்களுக்கு அஞ்சவில்லை. கடந்த மஹிந்த அரசாங்கம் வேண்டுமென்றெ தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தியது. நாம் அந்தத் தேர்தல்களை அஞ்சாமல் எதிர்கொண்டோம். அவற்றுக்கு முகம்கொடுத்தோம். அன்று ஜனநாயகம் என்ற ஒன்று காணப்படவில்லை. அரசியல் கட்சிகளுக்கு வீதியில் இறங்கி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியவில்லை. ஒருதலைப்பட்சமான முறையில் தேர்தல் நடத்தப்பட்ட காலத்திலேயே நாம் அவற்றுக்கு பயமின்றி முகம் கொடுத்தோம்.

இன்று நாம் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ள காலத்தில் ஒவ்வொரு கட்சியும் மக்களை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அவரவர் சொந்த இலாபங்களுக்காக செயற்படுகின்றனர். எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை மக்களே தீர்மானிப்பர்.

ஹெட்டி ரம்ஸி 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...