பலஸ்தீன அகதி நிவாரணம்: அமெரிக்கா கடும் நிதி வெட்டு | தினகரன்

பலஸ்தீன அகதி நிவாரணம்: அமெரிக்கா கடும் நிதி வெட்டு

பலஸ்தீனர்களுக்கான ஐ.நா நிவாரண நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கும் 125 மில்லியன் டொலர் நிதியில் பாதிக்கும் அதிகமான தொகையை அந்த நாடு நிறுத்தி வைத்துள்ளது.

ஐ.நா நிவாரண மற்றும் பணிகளுக்கான நிறுவனத்திற்கு 60 மில்லியன் டொலர் உதவியை விநியோகிப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் அதேவேளை, மேலும் 65 மில்லியன் டொலர் நிதியை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐ.நா அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுடனான அமைதி முயற்சிகளை நிராகரிக்கும் பலஸ்தீனத்திற்கான நிதி உதவியை நிறுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பலஸ்தீனத்திற்கான ஐ.நா நிவாரண நிறுவனத்திற்கு அமரிக்கா கிட்டத்தட்ட 30 வீத நிதியை வழங்குவதோடு கடந்த ஆண்டில் அது ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனத்திற்கு 370 மில்லியன் டொலர்களை வழங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் தவணையிலேயே அமெரிக்கா இந்த பெரும் தொகையை நிறுத்தி வைத்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு அமைதி முயற்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடுமையாக சாடியிருந்தார். ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்திருக்கும் நிலையில் அதன் எந்த ஒரு அமைதி திட்டத்தையும் ஏற்கப்போவதில்லை என்று அப்பாஸ் குறிப்பிட்டார்.

1994 ஒஸ்லோ உடன்படிக்கைக்கு இஸ்ரேல் முடிவு கட்டியதாகவும் அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் எவருக்கும் தண்டனை வழங்க இந்த நிதி நிறுத்தி வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நவுயேர்ட், ஐ.நா நிறுவனத்தின் சீர்திருத்தங்களை அமெரிக்கா பார்க்க விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.

எதிர்கால பரிசீலனைக்காகவே 65 மில்லியன் டொலர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

“ஏனைய போதிய செல்வந்த நாடுகள் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக தமது பங்களிப்பை செலுத்த முன்வர வேண்டிய நேரம் இது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அமெரிக்கா வழங்கும் உதவிகளுக்கு வரவேற்பு அல்லது மதிப்பு கிடைப்பதில்லை என்று டிரம்ப் முறையிட்டு இரண்டு வாரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா நிவாரண நிறுவனத்தில் 2016இல் அமெரிக்கா வழங்கிய 370 டொலர்களை தவிர்த்து ஏனைய தரப்புகள் மிகக் குறைவான நிதியையே அளித்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு இரண்டாவது அதிக நிதியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி இருப்பதோடு அது பாதிக்கும் குறைவான அளவாகும். ஐ.நா நிவாரண மற்றும் பணிகளுக்கான நிறுவனம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இது தவிர சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் திட்டங்களுக்காக அமெரிக்க 260 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குகிறது.

இவைகளுக்கு அப்பால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்கி வருகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிதியை ஏனைய நன்கொடை நாடுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஐ.நா மனிதாபினமான நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தற்போது சிரியாவுக்கான மனிதாபிமான இணைப்பாளராக செயற்படுபவருமான ஜான் எகலன்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதிகளை வாபஸ் பெறுவது, “மேற்குக் கரை, காசா, லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியாவில் தனது கல்விக்காக ஐ.நா நிறுவனத்தில் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கான அகதி சிறுவர்கள் உட்பட மாத்திய கிழக்கெங்கும் உள்ள பாதிக்கப்பட்ட பலஸ்தீன அகதிகள் மோசமான விளைவை சந்திக்க வேண்டி வரும்” என்று அவர் எச்சரித்தார்.

“மற்றொரு மோதல் நிலையில் அதற்கு முகம்கொடுக்க ஐ.நா நிறுவனத்தின் திறனை இது இல்லாமல் செய்வதோது குழந்தைகளின் பெற்றோர்கள் உயிர் வாழ்வதற்கு உதவும் சமூக பாதுகாப்பை மறுப்பதாக உள்ளது” என்று எகலன்ட் தெரிவித்தார்.

“பலஸ்தீன உரிமைகளை பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகம் நிறுவிய ஒரு நிறுவனத்தை கலைக்கும் இஸ்ரேலிய கொள்கையை டிரம்ப் நிர்வாகம் பின்பற்றுவது போல் தெரிகிறது” என்று பலஸ்தீன விடுதலை அமைப்பின் கிளை குழுவொன்று வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா நிவாரண நிறுவத்தை முற்றாக கலைத்துவிட வேண்டும் என்று ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் டன்னி டனொன் வலியுறுத்தியுள்ளார். இந்த நிறுவனம் இஸ்ரேல் எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

சுமார் 70 ஆண்டுகளாக இயங்கும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண நிறுவனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகள், லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியாவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீன அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கல்வி, உணவு, சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் தொழில்வாய்ப்புகளுக்கான உதவிகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. 


Add new comment

Or log in with...