இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சினிமாக் கவர்ச்சி | தினகரன்

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சினிமாக் கவர்ச்சி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னர் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும், மற்ற சில நாடுகளிலும் தமிழக அரசியல் குறித்த விவாதங்கள் உருவாகியுள்ளன. தமிழக மாநில இளைஞர்கள், ரஜினி மன்றத்தின் உறுப்பினர்களான அவரது ரசிகர்கள் மற்றும் பல கிராமப்புற மக்கள் இதை எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ், ஜெயலலிதா போன்ற நடிகர்கள் அரசியலில் நுழைந்து வெற்றி பெற்றுப் பதவியில் இருந்ததுடன் ஒப்பிடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், உலகின் 18 நாடுகளில் மொத்தம் 228 நடிகர்கள், நடிகைகள் அரசியலில் நுழைந்து எம்.பி. பதவிகளிலும், பிரதமர், ஜனாதிபதி பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆர்ஜென்டீனா- 1, பங்களாதேஷ்- 1, பிரேசில்- 1, கனடா -7, ஜெர்மனி- 1, இந்தியா- 48, இத்தாலி- 3, இஸ்ரேல்- 1, மெக்ஸிகோ -2, நெதர்லாந்து- 1, பாகிஸ்தான் -1, போலந்து -4, பிலிப்பைன்ஸ்- 33, ரஷ்யா -1, இலங்கை- 13, தாய்லாந்து- 8, பிரிட்டன்- 7, அமெரிக்கா- 22 என்று கலைத் துறையினர் அரசியலில் இறங்கியுள்ளனர்.

இந்தியாவில்தான் மிக அதிக அளவில் சினிமா நடிகர்கள் நேரடி அரசியலில் இறங்கியது தெரியவருகிறது. இதுவரையில் 48 பேரும், ரஜினி-49-ஆவது, கமல் இறங்கினால் 50 பேர் சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமா நடிகர்கள் அரசியலில் நுழைந்து பிரபலமடைவதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்த ​ெராபர்ட் ​ெதாம்ப்சன் எனும் பேராசிரியர் "24 மணி நேர தொலைக்காட்சிகளில் தோன்றி பார்வையாளர்களைக் கவரும் வகையில் பேசி வரும் ஓர் அரசியல்வாதியும், சினிமா, நாடகங்களில் தோன்றி மக்களைக் கவரும் நடிகரும் ஒரே மாதிரியானவர்களே” எனக் கூறியுள்ளார். அமெரிக்காவின் சைரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள இந்தப் பேராசிரியர் மேலும் கூறுவது கவனிக்கத்தக்கது.

சினிமா நடிகர்கள் தங்கள் அரசியலைத் தொடங்கும்போதே இவர்களுக்கு எதிரான அரசியல்வாதிகளை விடவும் சிறப்பான வகையில் அரசியல் களத்தில் உதிக்கும் நிலைமையில் இருப்பார்கள் எனக் கூறுகிறார் இவர். நிறைய பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து அரசியலில் வளர்ந்து நிற்கும் பல தலைவர்களையும் மக்கள் மன்றத்தில் எளிதாக இந்த நடிகர்கள் ஓரந்தள்ளி விடுவார்கள்.

இது போன்ற புதிய அரசியல்வாதிகளான நடிகர்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது, வாக்காளர்களின் புத்திசாலித்தனமில்லாத நடத்தை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒப்பீட்டளவில், தேர்தலில் போட்டியிடும் பழைய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகளாகவும், நிர்வாகத் திறமையற்றவர்களாகவும் இருப்பதாக வாக்காளர்கள் கருதுவது முக்கியமான காரணங்களாகின்றன எனக் கூறுகிறார் பேராசிரியர் ​ெதாம்ப்சன்.

அரவிந்த் ராஜகோபால், அமெரிக்காவின் நியூ​ேயார்க் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறையில் பேராசிரியராக இருப்பவர். புகழ்பெற்ற ஜெர்மனிய சமூகவியல் ஆராய்ச்சியாளர் மேக்ஸ் வீபர். இவர்கள் இருவரும் சேர்ந்து கூறியது கவனிக்கத்தக்கது:

'நவீன சமூக வளர்ச்சியில் நிர்வாகமும் ஆட்சி முறையும் மக்களின் சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் மிக அதிக அளவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கும் காலகட்டத்தில், மிக அதிக அளவில் மக்களைக் கவர்ந்த தலைவர்கள் பொது வாழ்வில் உருவாகி அரசியல் செய்வது வரவேற்கத்தக்கது' என இவர்கள் கூறுகிறார்கள்.

இதுபோன்ற தத்துவங்கள் ஒருபுறம் இருக்க, அரசியலில் புகுந்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நடிகர்களில், உலகமே போற்றும் வகையில் பணிசெய்த அமெரிக்க ஜனாதிபதியும், மிக அதிக அளவில் ஊழல் செய்து மணிலாவின் சிறையில் வாடிய பிலிப்பின்ஸ் நாட்டின் ஜனாதிபதியான ஜோசப் எஸ்ட்ராடாவும் நம்மால் கவனிக்கத்தக்கவர்கள்.

நல்ல மற்றும் கெட்ட தலைவர்களின் உதாரணங்களைக் கையிலெடுத்து புரிந்து கொண்டு நடிக, நடிகையர் அரசியலுக்கு வரும்போது நல்லது நடக்கும்.

'தனி மனித குறைபாடுகளும், கெட்ட குணாதிசயங்களும் உடையவர்களால் பொது நன்மை செய்ய முடியாது' என மேதறிஞர் இங்கர்சால் கூறுவார்.

'நமது நிர்வாகத் திறமை என்பது, கல்வியால் பெரிய பட்டங்களைப் பெறுவது அல்ல. நல்ல மனிதர்கள், திறமையானவர்கள், பொது நலத்தில் அக்கறை கொண்டவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ளும் திறமையே' என ​ெராபர்ட் கிளைவ் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜர் இதை நிரூபித்தார். அழியாப் புகழடைந்தார்.இதேசமயம், ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என்பது குறித்து வாதங்கள் நடந்து வருகின்றன.

தமிழக அரசியல் சூழலில் தற்போதைய நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் அதிமுக சரிவை சந்திக்கும் என்றும் 'இந்தியா டுடே' ' நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக அரசியலில் செயல்பட முடியாத நிலையால், தமிழக அரசியல் நாள்தோறும் புதிய அதிரடி அறிவிப்புகளும், மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன.

தினகரன் வளர்ச்சி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரின் அறிக்கை, அரசியல் பிரவேசம் என நாளும் அதிரடி திருப்பங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஒரு தெளிவான அரசியல் நிலை எட்டப்படாத நிலையில், தற்போது தமிழகத்திற்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றால் எந்தக் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கும் என்று 'இந்தியா டுடே' மற்றும் 'கார்வி' இணைந்து தமிழகத்தின் 77 தொகுதிகளில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக சுமார் 65 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் நாட்டு நடப்புகள் அனைத்தும் சிதைந்துள்ளதாகவும் மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

2016 தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களில் 3இல் ஒருவர் தற்போதைய சூழ்நிலையில், அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்றே தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.

அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் 60 சதவீத வாக்காளர்களின் கவனம் ரஜினியின் பக்கம் திரும்பியுள்ளது என்றும் அவர்களில் 26 சதவீதம் பேர் திமுகவிற்கு சாதகமாக திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரஜினியின் தலைமையிலான கட்சிக்கு 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் தினகரன், கமல்ஹாசனுக்கு போதிய வரவேற்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக நுழைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு 71 சதவீதம் பேர் ஆம் என தெரிவித்துள்ளனர்.

ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என்ற கேள்விக்கு 51 சதவீதம் பேர் இல்லை என்றும் அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பன்னீர்செல்வத்துக்கு 25 சதவீதம் பேரும், பழனிசாமிக்கு 12 சதவீதம் பேரும் இருவரும் இல்லை என 41 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக சிதைந்து போகுமா? என்ற கேள்விக்கு ஆம் என 54 சதவீதமும் பேரும், இல்லை என 35 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கமலுடன் ரஜினி கூட்டணி அமைப்பாரா? என்ற கேள்விக்கு ஆம் என 29 சதவீதமும் பேரும், இல்லை என - 31 சதவீதம் பேரும், எதிரெதிராக நிற்பார்கள் - 23 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் அரசியல் எதிர்காலம்? குறித்த கேள்விக்கு வெற்றிகரமாக மாறும் என - 53 சதவீதம் பேரும், தோல்வி அடையும் என - 34 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தல் வந்தால் வாக்குகளுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பார்களா என்ற கேள்விக்கு ஆம் என 72 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுஒருபுறமிருக்க, வரும் பெப்ரவரி 21-ம் திகதி தமது புதுக் கட்சிக்குப் பெயர் அறிவித்து, தமது சுற்றுப் பயணத்தையும் அதன் மூலம் தமது அரசியல் பயணத்தையும் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்றுமுன்தினம் 16ம் திகதி அவர் வெளியிட்ட அறிக்கையில், தம்மை வளர்த்தெடுத்த சமூகத்துக்கு தாம் நிறைய நன்றி சொல்லியிருப்பதாகவும், அதைத் தாண்டி கடமைகள் நிறைய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

"அக் கடமைகளின் தொடக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த இராமநாதபுரத்தில் இருந்து பெப்ரவரி 21ம் திகதி தொடங்க இருக்கிறேன். ஆரம்பச் சுற்றுப் பயணத்தில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன்.

இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல், எனக்கான கல்வி," என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

"தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் இராமநாதபுரம் மண்ணில், பெப்ரவரி 21-ம் திகதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தைத் தொடங்க இருக்கிறேன். இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது.

இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று, பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும். பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் இருக்கவேண்டும்.

அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களை சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்" என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.

"இது ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு. குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்" என்று கமல் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.    


Add new comment

Or log in with...