ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் | தினகரன்

ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம்

ஐ.தே.க செயற்குழுவில் பிரதமர் அறிவுறுத்தல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பகிரங்கமாக எக்காரணம் கொண்டும் எந்தவொரு விமர்சனத்தையும் மேற்கொள்ளக்கூடாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதன்கிழமை ஐ. தே. கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைப் பணித்துள்ளார்.

ஏதும் பிரச்சினைகள் இருக்குமாயிருந்தால் நேரடியாக தனக்கு அறியத்தருமாறும், அரசியல் ரீதியில் எந்தவொரு நெருக்கடியையும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாதெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஐ. தே. கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இடம்பெற்றது. ஜனாதிபதியுடன் ஐ. தே. கட்சியின் சில உறுப்பினர்கள் முரண்பட்டு ஜனாதிபதியை விமர்சிக்கும் போக்கினால் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இது நல்லாட்சிப் பயணத்திற்கு ஆரோக்கியமானதாக தென்படவில்லையெனவும் இங்கு பிரதமர் எடுத்துரைத்தார்.

இவ்விடயம் தொடர்பாக செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பிரதமர், நடந்தவற்றை மறந்துவிட்டு நாங்கள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதியை விமர்சிப்பதற்கு எந்தவொரு உறுப்பினரும் முயலக்கூடாது. பிரதமர் என்ற வகையில் எனக்கு அளிக்கப்படும் கௌரவத்தைவிடவும் ஜனாதிபதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் மதிக்கவேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.

பிணைமுறி விவகார அறிக்கை தொடர்பில் ஐ. தே. கட்சிக்கு சேறு பூசுவதற்கு சில சக்திகள் முயன்று வருவதாக நேற்றைய செயற்குழு கூட்டத்தில் பலரும் கருத்து வெளியிட்டனர். பேர்ப்பச்சுவல் நிறுவனம் மத்திய வங்கியின் பிணை முறிகளைப் பெற்று ஊழியர் சேமலாப நிதியத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வகையில் முறைகேடாக வருமானமீட்ட சம்பந்தப்பட்டவர்கள் முயற்சித்திருப்பதாக பிரதியமைச்சர் ஹர்ச டீ சில்வா சுட்டிக்காட்டினார்.

பிணைமுறி விவகாரத்தில் உண்மை நிலை என்னவென்பதை கட்சி நன்றாக அறிந்திருந்தும்கூட, இது நாட்டு மக்களுக்கு சரியான முறையில் கொண்டுசெல்லப்படாததன் காரணமாக கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த விடயத்தை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் ஊவா மாகாணத்தை வெற்றிகொள்வது எவ்வாறு என்பதை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெளிவுபடுத்தினார்.

பல வருடங்களாக எதிர்பார்த்து தியாகத்துக்கு மத்தியில் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டது சிலருக்கு ஆட்டம் போடுவதற்கு அல்லவென்றும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முக்கியமாக ஸ்ரீல. சு. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்தவும், டிலான் பெரேராவும் நேரடியாக பிரதமரை இலக்கு வைத்து விமர்சித்து வருவதாகவும் இதனை தங்களால் அனுமதிக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிணைமுறி விவகாரத்தில் மோசடி எதுவும் இடம்பெறவில்லையென்பது ஐ. தே. கட்சியின் நிலைப்பாடாக இருந்தால் அது குறித்து சகல விபரங்களையும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இங்கு வேண்டுகோள் விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலுக்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது தொகுதிகளில் நின்று பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மக்கள் ஆதரவை திரட்டுமாறும் இங்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பிரதமரை இலக்கு வைத்து சில சமூக ஊடக வலைத்தளங்கள் நடந்துகொள்ளும் விடயம் குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டபோது, அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதென இங்கு தீர்மானிக்கப்பட்டது. 

 


There is 1 Comment

good

Pages

Add new comment

Or log in with...