Saturday, April 20, 2024
Home » விஹார மகா தேவி பூங்கா மீண்டும் கொழும்பு மாநகர சபையிடம்

விஹார மகா தேவி பூங்கா மீண்டும் கொழும்பு மாநகர சபையிடம்

- நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் வழங்கிய ஏனைய சொத்துகளும் அந்தந்த நிறுவனங்களுக்கு

by Rizwan Segu Mohideen
November 5, 2023 10:34 am 0 comment

– நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பிரசன்ன பணிப்புரை

விஹார மகா தேவி பூங்காவை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்குமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 50 இன் கீழ், அபிவிருத்தி நோக்கங்களுக்காக எந்தவொரு சொத்தையும் கையகப்படுத்த, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் உள்ளது.

நவீனமயப்படுத்தும் பணிகளுக்காக இவ்வாறு கையகப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்ட சொத்துகளை, அந்தந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், இந்த பூங்காவை நவீன உலகிற்கு ஏற்றவாறு நவீனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதற்கமைய, கொழும்பு மாநகர சபையின் கீழிருந்த விஹார மகா தேவி பூங்கா, 2011 இல் திருத்த வேலைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில், உலக வங்கியின் உதவியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொழும்பு பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், விஹார மகா தேவி பூங்கா புனரமைக்கப்பட்டு 2013 இல் திறந்து வைக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் உள்ள பிரதான நகரங்களில் அமைக்கப்படும் நகர பொதுமக்கள் பூங்காக்களில் உள்ள அடிப்படையான விடயம் யாதெனில், சுற்றுமதில்கள், தடுப்புகள், வாயில் கதவுகள் போன்றவற்றால் மூடி வைக்கப்படாத சுதந்திரமான திறந்த சூழல் கொண்ட பூங்காக்களை உருவாக்குவதாகும்.

அதனை முன்மாதிரியாகக் கொண்டு புனரமைப்புப் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட விஹார மகாதேவி பூங்கா முழுவதும் காணப்பட்ட இரும்பு வேலிகள் அகற்றப்பட்டு, எல்லைகள் அற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விகார மகாதேவி பூங்காவை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையில், பூங்காவைச் சுற்றியிருந்த இரும்பு வேலிகள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இலுப்பை, பாலை, முதிரை போன்ற மரங்களை நட்டு, புதிய திட்டத்திற்கமைய புனரமைக்கப்பட்டுள்ளது. இங்கு அலங்காரத்திற்காக விசேட அலங்கார வீதி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பூங்கா பகுதியைச் சுற்றி, சிறுவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக அல்லது ஆரோக்கியத்திற்காக சைக்கிள் ஓட்டும் வகையிலான பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பூங்காவில் எந்தவொருவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான நடை பாதைகளையும் காணலாம்.

விஹார மகா தேவி பூங்காவானது, சுமார் 50 ஏக்கர் கொண்டதாகும். கொழும்பு கறுவாத் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள இந்த நூறு ஏக்கர் காணி 1866 ஆம் ஆண்டு அப்போதைய காலனித்துவ செயலாளரிடம் இருந்து கொழும்பு மாநகர சபையினால் பெறப்பட்டது எனவும், பின்னர் அது நகரவாசிகள் ஓய்வுக்காகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும் பூங்காவாக கட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தர்மபால மாவத்தை, சேர் மார்கஸ் பெனாண்டோ மாவத்தை, அல்பர்ட் சந்திரவங்கய, கலாநிதி சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை ஆகிய எல்லைகளைக் கொண்டு அமைந்துள்ள இந்த பூங்கா அக்காலத்தில் ‘சேர்கியுலர் கார்டன்’ என அழைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகள் அப்போதைய மேயர் சர்கியுலஸ் இடமிருந்து கொழும்பு மாநகர சபையினால் பெறப்பட்டதால், அதற்கு இப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. அதன் பின்னர், 1887 ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணியின் 50 வருட பொன்விழாவையிட்டு, இந்தப் பூங்காவிற்கு விக்டோரியா பூங்கா (Victoriya Park) என பெயரிடப்பட்டது.

விஹார மகா தேவி பூங்கா நவீனமயப்படத்தப்பட்டு, தற்போது 10 வருடங்களுக்கு மேலாகிறது. தற்போது காணப்படும் சிறிய புனரமைப்பு பணிகளை விரைவாக நிறைவு செய்து விஹார மகா தேவி பூங்காவை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT