வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு | தினகரன்

வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு

 

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (15) அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலய பிரதம குரு மற்றும் ஆலய பக்தர்கள், ஆலயம் உடைக்கப்பட்டு திருடப்பட்டமையை அவதானித்து வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆலயத்தின் மேல் பகுதியினூடாக ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்களே இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், ஆலயத்தில் இருந்த தேர் திருப்பணி உண்டியல் உட்பட மேலுமொரு உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலயத்தின் அலுவலக அறையின் கதவு மற்றும் யன்னல் உடைக்கப்பட்டிருந்ததுடன் அலுவலகத்தினுள் புகுந்து பணத்தினையும் திருடர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தின் மற்றுமொரு அறையில் வைக்கப்பட்டிருந்த தேர் திருப்பணிக்கான பற்றுச்சீட்டுக்களை பையொன்றில் கட்டி ஆலயத்தின் பின்புறமாக கைவிட்டு சென்றுள்ளனர்.

இத்திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

 


Add new comment

Or log in with...