எடப்பாடியை எச்சரிக்கிறார் நடராஜன்! | தினகரன்

எடப்பாடியை எச்சரிக்கிறார் நடராஜன்!

 

'முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றாவிட்டால் அவரை மாற்ற நான் அரசியல் களத்தில் இறங்க தயங்க மாட்டேன்' என்று சசிகலாவின் கணவரான ம. நடராஜன் தெரிவித்துள்ளார். 'சசிகலாவிடம் இதற்கான ஒப்புதலை வாங்கி அரசியல் களத்தில் குதிப்பேன்' என்றும் நடராஜன் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

"ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆணையம் அமைத்ததே தவறு. மக்களுக்கு பல சந்தேகங்கள் எழும். ஆணையம் அமைத்ததால் ஜெயலலிதா மரணத்தில் என்ன தெளிவை பெற்று விட்டார்கள்? நாளையே ஆணையம் தீர்ப்பு தந்தாலும் அதனால் எதுவும் நடக்கப் போவதில்லை.

ஜெயலலிதாவின் உழைப்பில் 2016இல் வந்தது அதிமுக அரசு. எனவே அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்றே சசிகலா விரும்புகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி நீடிப்பாரா என்பதில்தான் சசிகலா மாறுபட்டிருக்கிறார். இந்த அரசின் செயல்பாடு மக்கள் விரோத செயல்பாடு என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை.

இன்றும் எனக்கு நாடு முழுவதும் செல்வாக்கு இருக்கிறது. ஒரே ஒரு தொலைபேசி போட்டு என்னுடைய காரியத்தை சாதிக்க முடியும். ஆனால் எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாடுபடுகிறார். மற்றவர்களிடம் 'நீங்கள் தேர்தலில் வெற்றி பெற என்னுடைய தயவு வேண்டும்' என்று மிரட்டுவதெல்லாம் ஏற்பதற்கில்லை.

ஜெயலலிதா வாசித்த அறிக்கைகள் எல்லாமே நான் எழுதிக் கொடுத்தவைதான். நான் போட்டு கொடுத்த இலவச திட்டங்கள்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன. ஜெயலலிதாவிடம் வாழ்நாள் முழுவதும் இருந்த நல்ல விஷயம் நான் எழுதிக் கொடுத்த அனைத்து விஷயங்களையும் ஒரு மாற்றம் இல்லாமல் அப்படியே பின்பற்றி வெற்றியைக் கண்டார்.

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாவிட்டால் அவரை மாற்ற நான் தயங்க மாட்டேன். என்னுடைய மனைவியிடம் இருந்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் நான் அரசியல் களத்தில் இறங்குவேன்.ஜெயலலிதா ஒருபோதும் சசிகலாவை விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்ததில்லை. சசிகலா தன்னுடைய தோழி என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார், இதற்கு மேல் என்ன உத்தரவாதம் தேவை என்று அனைவருமே கேள்வி எழுப்புகின்றனர். சசிகலா என்னுடன் வாழ வேண்டும் என்று அழைத்து வர என்னுடைய தாயாரும், சசிகலாவின் தாயாரும் போயஸ் கார்டன் சென்றனர்.

அப்போது ஜெயலலிதா தட்டு நிறைய வைர நகைகளை வைத்து எடுத்து வந்து இவையெல்லாம் சசிகலாவிற்காக செய்திருக்கிறேன் என்று சொன்னார்.

ஆனால் அதற்கு சசிகலாவின் தாயார் கிருஷ்ணவேணி 'இதெல்லாம் வேண்டாம். என் மகள் அவளுடைய கணவருடன் தான் வாழ வேண்டும்' என்று சொன்னார்.

ஆனால் ஜெயலலிதாவிற்கு சசிகலா தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.'

இவ்வாறு நடராஜன் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...