பாகிஸ்தான் இராணுவத்தளபதி முப்படை தளபதிகளுடன் சந்திப்பு | தினகரன்

பாகிஸ்தான் இராணுவத்தளபதி முப்படை தளபதிகளுடன் சந்திப்பு

 

 

ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சருடன் நாளை சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவிட் பஜ்வா பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி உட்பட முப்படைகளின் தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பு இன்று (16) பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி காரியாலயத்திலும், இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படை தலைமையகங்களிலும் தனித்தியாக இடம்பெற்றதுடன் முப்படைகளினதும் விசேட மரியாதை அணிவகுப்பும் வழங்ககப்பட்டது.

இதேவேளை, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன ஆகியோரையும் நாளை (17) உத்தியோகபூர்வமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (15) மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி தலைமையிலான தூதுக் குழுவினருக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.

இராணுவ தளபதியைச் சந்தித்த அவர், இரு தரப்பு முக்கிய விடயங்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாகிஸ்தான் தளபதிக்கு கடற்படையின் விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை விமானப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாகிஸ்தான் தளபதிக்கு விமானப்படையின் விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில வைத்தியரட்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இறுதியாக கொழும்பிலுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்திற்கு விஜயம் செய்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

(ஸாதிக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...