தைப்பொங்கல் திருநாள் | தினகரன்

தைப்பொங்கல் திருநாள்

 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (பாரதியார்)

தைப்பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா ஆகும். தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், மொரீசியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும்.

பயிர்களின் வளர்ச்சிக்கு மழையைத் தந்து வளம் தரும் சூரிய பகவானுக்கு உழைப்பின் முதல் அறுவடையை பொங்கல் வைத்து படைத்து நன்றி கூறி வழிபட்டு வரும் மரபு தமிழர்களுக்கே உரித்தானதாகும். இதனை தொன்று தொட்டு எம்மக்கள் கடைப்பிடித்து வருவதனை நாம் அவதானிக்கலாம்.

பொங்கல் விழா நான்கு நாட்கள் அதாவது போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதுண்டு. இன்றைய தினம் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறுகின்றன. தைப்பொங்கல் விழாவுக்கு முதல்நாள் நடைபெறுவது போகிப் பொங்கல் விழாவாகும். போகி என்பவன் இந்திரன். அவன் மேகங்களை இயக்கி மழையை வழங்கும் இறைவனாக கருதப்பட்டான். தமிழ்நாட்டார் காலத்திலிருந்தே இந்திரனை விளை நிலங்களின் தெய்வமாக வைத்து வழிபட்டு வரலாயினர். சோழ வள நாட்டில் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.

இப்போகிப் பொங்கலுக்கு அடுத்து வருவது தைப்பொங்கல் பெருநாளாகும். இப்பெருநாள் மேற்குறிப்பிட்டபடி சூரியனை வழிபடும் நாளாகும். இப்பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாள் நடைபெறுவது மாட்டுப்பொங்கல் திருநாளாகும். நாட்டுப் புறங்களில் இப்பொங்கல் மிகச்சிறப்பாக நடைபெறும். பண்டைக் காலத்தில் மாடே செல்வமாகக் கருதப்பட்டது. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற பொருளுமுண்டு.

மனித இனத்திற்காக உழைக்கும் மிருகங்களில் மாட்டுக்கு இணையாகச் சொல்லக் கூடிய எந்த மிருகமுமில்லை. விளைநிலத்தை உழுவதற்கு உதவுவது மாடு. களத்து நெல்லை களஞ்சியத்தில் சேர்க்க உதவுவது மாடு பாலும் தயிரும் நெய்யும் தந்து நம் உடலைப் பாதுகாக்க உதவுவது மாடு. அமைதியும் அன்பும் பொறுமையும் உடையது பசு. தன் கன்றுக்குரிய பாலைக் கவர்ந்து கொள்ளும் கல் நெஞ்சர்க்கும் ஒளிக்காது பாலை வழங்கி வரும் கருணை உடையது பசு. இப்படிக் கருணையுள்ள பசுக்களை ஆதரிக்க வேண்டும் என்பது தமிழர் கொள்கை. வயல் நிலங்களில் கடுமையாக உழைக்கும் காளை மாடுகளும் காலையும் மாலையும் இனிய பாலை வழங்கும் கறவை மாடுகளும் நோயின்றி செழித்து வளர்வதற்காக நிகழ்ந்து வருவதே மாட்டுப் பொங்கலாகும். நன்றி மறவாமை என்ற மானிட நற்பண்பினை அன்று தொட்டு இன்று வரை நானில மக்களுக்கு எடுத்துக் காட்டும் தலை சிறந்த விழா தனிப்பெரும் பொங்கல் விழா.

 


Add new comment

Or log in with...