வீதி விபத்துகளை தடுக்க மாற்று நடவடிக்கை? | தினகரன்

வீதி விபத்துகளை தடுக்க மாற்று நடவடிக்கை?

 

நாட்டில் வாகன விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒரு விதத்தில் வாகனச் சாரதிகள் போக்குவரத்து விதிகளை ஒழுங்காகப் பின்பற்றத் தவறுவதாகவும், பெரும்பாலானோர் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் போக்குவரத்துப் பொலிஸ பிரிவு இதனைக் கட்டுப்படுத்த சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் வாகன விபத்துக்களால் ஏற்பட்ட மரணங்கள் முன்னைய வருடங்களை விடவும் கூடுதலானதாகும். இதற்கு பிரதான காரணம் நாட்டில் வாகனப் போக்குவரத்து அதிகரித்திருப்பது காரணமானாலும் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மற்றொரு காரணமாகும். முக்கியமாக முச்சக்கரவண்டிகளும், மோட்டார் சைக்கிள்களை பாவிப்போருமே கூடுதலாக போக்குவரத்து விதிகளை மீறுவோராக காணப்படுகின்றனர்.

பொலிஸார் அத்தகையவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுத்தபோதிலும் மீண்டும், மீண்டும் அதே தவறை செய்பவர்களாகவே இருக்கின்றனர். அன்று 100 ரூபா அபராதம் செலுத்தப்படும்போது காணப்பட்ட நிலை இன்று அபராதத் தொகை ரூபா ஆயிரத்தைத் தாண்டிய நிலையிலும் தவறு அதே அளவு நடந்துகொண்டே இருப்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கு மாற்றுத் தீர்வொன்று காணப்படவேண்டிய அவசியமும், அவசரமும் இன்று ஏற்பட்டுள்ளது.

எமது நாட்டில் வாகன விபத்துக்களால் நாளாந்தம் குறைந்தது 10 மரணங்கள் சம்பவிப்பதாக பொலிஸ் அறிக்கைகள் மூலம் தெரிய வருவதாகத் தெரிவித்திருக்கும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மக்களின் உயிரோடு விளையாடும் இந்த ஆட்டத்தை தொடர்ந்து அனுமதிக்க முடியாதெனக் குறிப்பிட்டிருக்கிறார். வாகனச் சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு மாதகால பயிற்சி செயலமர்வொன்றுக்கு கட்டாயப்படுத்தப்படவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் சாகலவின் இந்த யோசனை வரவேற்கப்படவேண்டியதொன்றாகவே நோக்கவேண்டும். ஏனெனில் பிரதான நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவே காணப்படுகிறது. போக்குவரத்து ஒழுங்கு விதிகளை பேணுவதில் வாகன ஓட்டுனர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். கூடுதலான விபத்துக்களுக்குக் காரணமாக வாகனத்தை செலுத்திக்கொண்டே மொபைல் போன்களில் பேசிக்கொண்டு செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஏலவே பொலிஸார் இப்படி கைத்தொலைபேசியை பாவித்தவாறு வாகனம் செலுத்துவதை தடை செய்துள்ளபோதிலும் அதனை மக்கள் பேணுவதாக தெரியவில்லையென கண்டறியப்பட்டுள்ளது.

வீதிகளில் வாகனம் செலுத்துவோர் போக்குவரத்து ஒழுக்க விதிகளை சரியான முறையில் கடைப்பிடித்தால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியும். அல்லது குறைத்துக்கொள்ளவாவது முடியும். இந்த நிலையில் விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு புதிய நடைமுறையொன்று கடைப்பிடிக்கப்படவேண்டியதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. மனித உயிர்கள் பறிக்கப்படக்கூடிய விபத்துக்கள் ஏற்படுமிடத்து சாரதிக்குரிய அல்லது அந்த வாகனத்தைச் செலுத்தியவரது சாரதி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுவதோடு எதிர்காலத்தில் அவருக்கு எந்த விதத்திலும் மற்றொரு அனுமதிப்பத்திரம் வழங்கப்படாதிருப்பதை உறுதி செய்யவேண்டும்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுவோர் மீதான நடவடிக்கை மேலும் பலப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க போக்குவரத்துப் பொலிஸாருக்கான செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்ற முதலுதவி வேலைத் திட்டத்தின்போது தெரிவித்திருக்கிறார்.

முதற்கட்டமாக கொழும்பு பிரதான வீதிகளிலும் சுற்றுப்புற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களில் ஒழுங்குவிதிகளை மீறுவோர் மீது புதியமுறையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவர்களுக்குரிய தண்டச் சீட்டு அல்லது அபராதச் சீட்டு அவர்களது வீடுகளுக்கே அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும்போது அதனை நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டு பிடிக்கப்படும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட சாரதி அல்லது வாகன உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு அவரது புகைப்படத்துடன் கூடியதாக தண்டச் சீட்டு அவர்களது முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் முடிந்தளவு வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு நடவடிக்கை எடுக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க சட்டம் ஒழுங்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டம் வரவேற்கக் கூடியதே. ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியப்படும் அல்லது சாதகமாக அமையும் என்பதை ஆராய்ந்துபார்க்க வேண்டியது முக்கியமானதாகும்.

எவ்வாறாவது வீதி விபத்துக்களையும், அதனால் ஏற்படக்கூடிய மரணங்களையும் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு எந்த வழியிலாவது தீர்வு தேடப்படவேண்டியது மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. 


Add new comment

Or log in with...