இஸ்ரேல் மேலும் 1,100 யூத குடியேற்றங்களுக்கு அனுமதி | தினகரன்

இஸ்ரேல் மேலும் 1,100 யூத குடியேற்றங்களுக்கு அனுமதி

 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 1,100க்கும் அதிகமான புதிய குடியேற்ற வீடுகளுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்திருப்பதாக ‘பீஸ் நவ்’ தொண்டு அமைப்பு நேற்று வியாழக்கிழமை குறிப்பிட்டது.

குடியேற்ற கட்டுமானம் தொடர்பான அதிகாரம் பெற்ற பாதுகாப்பு அமைச்சின் குழு கடந்த புதன்கிழமை இந்த அனுமதியை வழங்கி உள்ளது. இதில் 352 வீடுகளுக்கு இறுதியான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதோடு ஏனையவை இது தொடர்பான செயற்பாடுகளின் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக மேற்படி தொண்டு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஒட்டுமொத்தமாக 1,122 வீட்டு தொகுதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதோடு இதில் ஏழு வீடுகள் ஏற்கனவே இருப்பவை ஆகும்.

அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பெரும்பாலான குடியேற்றங்கள் மேற்குக் கரையில் ஆழமாக ஊடுருவி உள்ளன.

இவை இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன இரு நாடுகள் தீர்வுத் திட்டத்தின்படி இஸ்ரேல் வெளியேற வேண்டிய இடங்களாகும்.

கடந்த ஆண்டில் 6,742 குயேற்ற வீட்டுத் திட்டங்களுக்கு இஸ்ரேல் அங்கீகாரம் அளித்ததாக பிஸ் நவ் குறிப்பிட்டுள்ளது. இது 2013க்கும் பின் அதிகமாகும்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதி முயற்சியின் பிரதான இடையூறாக பார்ப்படும் இஸ்ரேலிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின் படி சட்டத்திற்கு விரோதமானதாகும். 


Add new comment

Or log in with...