சிரிய கிளர்ச்சியாளர் கோட்டையில் அரச படையின் தாக்குதல் உக்கிரம் | தினகரன்

சிரிய கிளர்ச்சியாளர் கோட்டையில் அரச படையின் தாக்குதல் உக்கிரம்

100,000 பேர் இடம்பெயர்வு

சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் எஞ்சி இருக்கும் மிகப்பெரிய கோட்டை மீது அரச படையின் தாக்குதல்களால் 100,000 பொதுமக்கள் வரை இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.

வட மேற்கு மாகாணமான இத்லிப் மற்றும் அண்டைய பகுதிகளான ஹமா மற்றும் அலெப்போவில் கடந்த நவம்பர் தொடக்கம் மோதல்கள் மற்றும் வான் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்த பயங்கர சூழல் தமது வீடுகளில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை நிறுத்தும்படி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் துருக்கி, சிரிய அரசின் கூட்டணியான ஈரான் மற்றும் ரஷ்யாவை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இத்லிப் மோதல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மாகாணத்தின் கண்காணிப்பு இடங்களில் துருக்கி தனது துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.

நாட்டுக்குள் இடம்பெயர்ந்த 1.16 மில்லியன் பேர் உட்பட வட மேற்கு சிரியாவில் சுமார் 2.65 மில்லியன் மக்கள் வாழ்வதாக ஐ.நா கூறுகிறது.

சிரிய அரச படை மற்றும் அதற்கு ஆதரவான போராளிகள் மூலோபாய முக்கியம் வாய்ந்த அபூ அல் சுஹுர் விமானத்தளத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த முகம் 2015இல் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது.

மேலும் 16 கிராமங்களை மீட்டிருக்கும் சிரிய அரச படை மூன்று மாதங்களுக்குள் மொத்தம் 135க்கும் அதிகமான கிராமங்களை கைப்பற்றி இருப்பதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இத்லிப்பில் வான் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு இவ்வாறான தாக்குதல்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...