ரொஹிங்கியர் கொலை: மியன்மார் இராணுவம் முதல்முறை ஒப்புதல் | தினகரன்

ரொஹிங்கியர் கொலை: மியன்மார் இராணுவம் முதல்முறை ஒப்புதல்

 

 ரகைன் மாநிலத்தில் அண்மையில் நடந்த வன்முறைகளில் ரொஹிங்கிய முஸ்லிம்களின் கொலைகளில் மியன்மார் படையினர் தொடர்புபட்டதை அந்நாட்டு இராணுவம் முதல்முறை ஒப்புக்கொண்டுள்ளது.

மங்டோவுக்கு அருகில் உள்ள இன் டின் கிராமத்தில் 10 பேர் கொல்லப்பட்டதில் நான்கு பாதுகாப்பு படை உறுப்பினர்கள் தொடர்புபட்டது விசாரணைகளில் தெரியவந்ததாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

‘பங்காளி தீவிரவாதிகள்’ என்று அழைக்கப்படுவோருக்கு எதிரான பதில் தாக்குதலுக்கு இந்த நால்வரும் கிராம மக்களுக்கு உதவி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ரகைன் மாநிலத்தில் ரொஹிங்கியர்களுக்கு எதிராக இன சுத்திகரிப்பில் ஈடுபடுவதாக மியன்மார் மீது குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த ஓகஸ்ட் கடைசியில் வன்முறை வெடித்தது தொடக்கம் 650,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர். படுகொலை, கற்பழிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் பற்றி அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

உள்ளூர் பெளத்த குண்டர்களுடன் இராணுவமும் இணைந்து தமது கிராமங்களுக்கு தீமூட்டி தாக்குதல் மற்றும் கொலைகளில் ஈடுபட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறுவதை நிராகரிக்கும் மியன்மார் இராணுவம் ரொஹிங்கிய போராளிகளுடனேயே சண்டையிட்டு வருவதாக வலியுறுத்துகிறது.

இந்நிலையில் இன் டின் கிராமத்தில் புதைகுழி ஒன்றில் 10 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மியன்மார் இராணுவம் கடந்த மாதம் அறிவித்தது. இது தொடர்பான விசாரணை முடிவுகள் இராணுவ தளபதியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படுகொலைகள் செப்டெம்பர் 2 ஆம் திகதி இடம்பெற்றிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

“10 பங்காளி தீவிரவாதிகளை கொன்றதை கிராமத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் ஒப்புக்கொண்டது உண்மையே” என்று அதில் கூறப்பட்டுள்ளது. ரொஹிங்கிய போராளிகளையே, பங்காளி தீவிரவாதிகள் என அழைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...