கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை அணி | தினகரன்

கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை அணி

 

ஐந்தாவது முறையாக நடைபெற்று வருகின்ற கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் (10) நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்புச் சம்பியனான இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.

டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் அஜே குமார் ரெட்டி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கௌஷால் சில்வா மற்றும் சுரங்க சம்பத் ஜோடி, 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டது. எனினும், சில்வாவிற்கு உதவியாக ஓடிய மேலதிக வீரர் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் சதங்களைக் குவித்து அசத்தியிருந்த ருவன் வசந்த ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழக்க, மறுபுறத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சுரங்க சம்பத் 68 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய அணித் தலைவர் சந்தன தேஷப்பிரிய, போட்டியின் இறுதிவரை ஆடுகளத்தில் நின்றுபிடித்து நிதானமாக விளையாடி 67 பந்துகளுக்கு முகங்கொடுத்து 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, 40 ஓவர்கள் நிறைவில் இலங்கை கட்புலனற்றோர் அணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக சுனில் ரமேஷ் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து 359 என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய கட்புலனற்றோர் அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை எளிதாக முகங்கொடுத்து 8 ஓவர்கள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தனர். அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி துடுப்பாட்டத்தில் வாணவேடிக்கை நிகழ்த்திய தீபக் மலிக், போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடி 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இந்தியாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.

போட்டியின் ஆட்டநாயகனாக தீபக் மலிக் தெரிவாக, பெறுமதி மிக்க வீரருக்கான விருதை இலங்கையின் சந்தன தேஷப்பிரிய பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இந்திய கட்புலனற்றோர் அணி, இம்முறை கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை அணி தாம் பங்குபற்றிய முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை 303 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது. இந்நிலையில், நாளை 13ஆம் திகதி நடைபெறவுள்ள லீக் போட்டியில் நேபாள அணியை இலங்கை சந்திக்கவுள்ளது. 


Add new comment

Or log in with...