அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்: களம் திரும்பும் ஜோகோவிச் | தினகரன்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்: களம் திரும்பும் ஜோகோவிச்

 

முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 6 மாதமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்த ஜோகோவிச் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லமான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்பேர்னில் எதிர்வரும் 15-ம் திகதி தொடங்குகிறது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 6 மாதமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்து வந்த ஜோகோவிச் (செர்பியா) மெல்பேர்னில் நேற்றுமுன்தினம் நடந்த காட்சி போட்டியில் 6-1, 6-4 என்ற நேர்செட்டில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) தோற்கடித்தார். முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 6 முறை அவுஸ்திரேலிய பகிரங்க பட்டத்தை வென்றவருமான ஜோகோவிச் அளித்த பேட்டியில், ‘இது சிறப்பான ஒரு தொடக்கம். மீண்டும் களம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார். இதன் மூலம் ஜோகோவிச் அவுஸ்திரேலிய பகிரங்க போட்டியில் களம் இறங்குவது உறுதியாகி இருக்கிறது.

அன்டி முர்ரே (இங்கிலாந்து), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய நிலையில் ஜோகோவிச் மீண்டும் களம் திரும்ப இருப்பது போட்டி அமைப்பாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்து இருக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆடாத நிலையில் முன்னாள் முதனிலை வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) குடும்ப பிரச்சினை காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். 


Add new comment

Or log in with...