சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு திருமணம் நடந்ததா? | தினகரன்

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு திருமணம் நடந்ததா?

 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நூலை 'ஜெயலலிதா: மனமும் மாயையும்' என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி எழுதியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பாக ஜெயலலிதாவின் வரலாற்றை வாஸந்தி ஆங்கிலத்தில் எழுதி, வெளியாகவிருந்த நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா. அதையடுத்து அந்த நூலின் வெளியீடு தடை செய்யப்பட்டதோடு, இன்னும் வெளிவராமலேயே இருக்கிறது.

இப்போது நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டுள்ள இந்த நூலில், தான் நீண்ட காலமாகத் திரட்டிய தகவல்களின் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்வதோடு, அறியப்படாத அவரது பல பக்கங்களையும் முன்வைக்கிறார் வாஸந்தி. இந்த நூலின் சில பகுதிகள் இங்கே:

எம்.ஜி.ஆருக்கு அந்த நாசூக்கான பதின் வயதுச் சிறுமியைப் பிடித்துப்போனது. மற்ற ஹீரோயின்களிலிருந்து அவள் மாறுபட்டாள். எந்த வம்பிலும் சிரத்தையில்லாமல், சதா புத்தகமும் கையுமாக இருந்த, ​ெகான்வென்ட் ஆங்கிலம் பேசும் அந்த பால்வடியும் முகம் அவரை ஈர்த்தது. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். தனக்கு ஆதர்ச மனிதராக, புரவலராக, நெருங்கிய நண்பருக்கு மேற்பட்ட உறவில் இருப்பார் என்று கற்பனைகூட செய்திருக்க முடியாது.

எம்.ஜி.ஆர் அவருக்கு தந்தை வயதில் இருந்தவர். இருவரும் சேர்ந்து 27 படங்களில் நடித்தார்கள். அவர்கள் நடித்த படங்கள் எல்லாம் வெற்றிப்படங்கள் ஆயின. ஜெயலலிதா நடித்தது நூறு படங்களுக்கு மேல், பல சூப்பர் ஹிட் படங்கள் - தமிழில் 82, தெலுங்கில் 26, கன்னடத்தில் ஐந்து என்ற பட்டியலில் மிக மோசமாகத் தோல்வியடைந்த ஒரு இந்திப் படமும் ஆங்கிலப் படமும் உண்டு.

தமிழ் ரசிகர்களுக்கு, முக்கியமாக எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா ஜோடி சேர்வதுதான் அதிக விருப்பமாக இருந்தது. அவர்கள் இருவரிடையே ஒரு இயல்பான இரசாயன இயைபு ஏற்படுவதுபோல இருந்தது. எம்.ஜி.ஆரே ஜெயலலிதாவை எனக்கு ஹீரோயினாகப் போட்டால்தான் நடிப்பேன் என்று சொல்ல ஆரம்பித்தார்.

நிச்சயம் அதை யாரும் ரசிக்கவில்லை. அது அசம்பாவிதமானதாகப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு பயந்து வாயைத் திறக்காமல் இருந்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவரும் படத் தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் அதை முளையிலேயே கிள்ளிவிட வேண்டுமென பரபரத்தார்.எல்லோரது கவனத்திலும் வராத ஒரு விஷயம் இருந்தது. ஜெயலலிதாவுக்கே நாளாக நாளாக அலுப்பூட்டும் வகையில் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாடு அதிகரித்தது. அவருடைய எல்லா செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் - அவர் அணியும் உடையைக்கூட - கட்டுப்படுத்தவும் தொடங்கினார். அவருடைய பணத்தைக்கூட எம்.ஜி.ஆர்தான் தன் கட்டுக்குள் வைத்திருந்தார். செலவுக்கு அவர் எம்.ஜி.ஆருடைய முகம் பார்த்துப்பெற வேண்டியிருந்தது. பல சமயங்களில் இது மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. மூச்சு முட்டியது. உறவை முறித்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. எம்.ஜி.ஆருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் இறங்க வேண்டியிருந்தது".

எம்.ஜி.ஆருடனான ஜெயலலிதாவின் உறவு எழுபதுகளின் மத்தியில் சிக்கலானது. ஆர்.எம்.வீயின் விடா முயற்சியால் எம்.ஜி.ஆர். வேறு கதாநாயகிகளுடன் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவின் மீது இருந்த பிரேமையோ மோகமோ அடிநாதமாக அவருள் இருந்தவண்ணம் இருந்ததற்கான அடையாளங்கள் மீண்டும் மீண்டும் புதுப்பித்து வந்ததிலிருந்து தெளிவானது.

"எம்.ஜி.ஆர். ஒரு சர்வாதிகாரியாகத்தான் ஜெயலலிதாவை நடத்துவார். திடீர்னு ப்ரொட்யூசர்கிட்ட சொல்வார் படப்பிடிப்புக்கு ஜெயலலிதாவை அழைக்கனும்னு, அவங்களைக் கேட்காம. ஜெயலலிதா உடனே தன்னுடைய ஷூட்டிங்கை ரத்து செஞ்சுட்டுப் போக வேண்டும், இல்லேன்னா எம்.ஜி.ஆருக்கு கோவம் வரும். ஐயோ, ஜெயலலிதாவை அந்த ஆள் ரொம்ப இம்சை செஞ்சிருக்கார்" என்றார் பிலிம் நியூஸ் ஆனந்தன். 1972ல் எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கி அரசியலில் ஆழ்ந்து போனதும் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் குறைந்துபோனது.

தொடர்ந்து தெலுங்கிலும் கன்னடத்திலும் நடிப்பதில் மிகவும் மும்முரமானார் ஜெயலலிதா. அப்போதுதான் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடன் நட்பு ஏற்பட்டது. ஷோபன் பாபு எம்.ஜி.ஆரைவிட வயதில் இளையவர். அது தீவிரமான நட்பாக மலர்ந்தது. அதைப் பற்றி ஜெயலலிதாவே தனது (பாதியில் முடிந்த) சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய நெருங்கிய தோழிகள் சாந்தினிக்கும் ஸ்ரீமதிக்கும் இது குறித்துத் தெரிந்திருந்தது. ஷோபன் பாபுவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினார். மற்ற பெண்களைப் போல இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டார் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அந்தத் திருமணம் நடக்கவில்லை.

ஆனால், சாந்தினி புலானி சொன்ன கதையோ வேறு மாதிரி இருந்தது. சாந்தினிக்கு அது எந்த வருஷம் என்று சரியாக நினைவில்லை. 1977 அல்லது 78ஆக இருக்கலாம் என்றார். சாந்தினியையும் அவருடைய கணவர் பங்கஜ் புலானியையும் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.

விருந்துக்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான புகைப்பட அல்பத்தைக் காண்பித்தார்.

அதில் அவருக்கும் சோபன் பாபுவுக்கும் நடந்த திருமண புகைப்படங்கள் இருந்தன.

"சரியான ஐயங்கார் பிராமண முறைத் திருமணம். சாஸ்திரிகள் செய்வித்த போட்டோவோடு. அந்த அல்பம் எத்தனை பெரிசு தெரியுமோ? ஒரு பெரிய மேசை முழுக்க அடைத்தது. நாங்கள் படங்களைப் பார்க்க மேசையைச் சுற்றி நடக்க வேண்டியிருந்தது. ஜெயா ரொம்ப மகிழ்ச்சியா இருந்தா. "அவர் ஒரு அற்புத மனிதர். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்றாள். மணப்பெண் மாதிரி கன்னம் சிவந்துபோச்சு வெட்கத்திலே. அவ ரொம்ப சந்தோஷமா இருந்ததை என்னால புரிஞ்சுக்க முடிந்தது".

ஆனால், அந்த அல்பம் ஒரு புதிராகவே இருக்கிறது. மற்றவர்கள் சொல்லும் தகவல்படி அந்தத் திருமணம் நடக்கவேயில்லை.

2001ல் ஜெயலலிதா பதவியேற்றபோது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னார், "அவர் நிறையப் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார். அவரை அணுகுவதில் சிரமம் இருக்காது. அவருடன் பணிபுரிவதும் எளிதாக இருக்கும்." ஆனால், ஒரே மாதத்தில் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.

அமைச்சர்களுடனோ அதிகாரிகளுடனோ கலந்துபேசாமல் கருணாநிதியைக் கைதுசெய்ய உத்தரவிட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வாதிகாரியாக வலம்வந்தார்.

எந்த அமைச்சரும் சுதந்திரமாகக் கருத்துச் சொல்வது அவருக்குப் பிடிக்காது. வாயைத் திறந்தால் கழுத்தில் கத்திவிழும் என்று அவர்களுக்குத் தெரியும். அவருடைய ஆட்சியில் வேலை செய்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி சொன்னார், "அவருக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டுமே நாங்கள் சொல்ல வேண்டும்."


Add new comment

Or log in with...