கூட்டமைப்பின் விரிசலால் தமிழின அரசியல் பலவீனம் | தினகரன்

கூட்டமைப்பின் விரிசலால் தமிழின அரசியல் பலவீனம்

 

'உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படியிருக்கும்' என்பதே பலரது கேள்வி.

தங்களுடைய அரசியற் சக்தியாகக் கூட்டமைப்பு உள்ளது. தங்களுடைய அபிலாஷைகளுக்கேற்ற விதத்தில் அது செயற்படும் எனப் பலரும் நம்பியிருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றமாதிரிக் கூட்டமைப்பு நடந்து கொள்ளவில்லை. பதிலாக உள்ளரங்கில் சிதைந்து கொண்டிருக்கும் ஓரமைப்பாக அது மாறியிருப்பதையே மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின் வெளிப்படுத்துகைகளும் இதைத் துல்லியமாகக் காட்டியுள்ளன. அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகளும் இதையே கோடி காட்டுகின்றனர்.

மக்களிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதிலாக நம்பிக்கையீனத்தை உருவாக்கும் விதமாகவே கூட்டமைப்பின் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன. செயற்பாடுகளும் அப்படித்தான். இதனால், வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு கட்டமைப்பாக அது மாறியுள்ளது. ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் கொண்டிருப்பதற்குப் பதிலாக உள்முரண்களையும் மோதல்களையும் உற்பத்தி செய்யும் அமைப்பாகி விட்டது.

2009 இற்குப் பிறகு அது மெல்ல மெல்ல உடைந்து இப்பொழுது முற்றாகவே உடைந்து சிதறி விடும் இறுதிக் கட்ட நிலைக்கு வந்துள்ளது. முதலில் (2010) கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து விலகினார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உருவாகியது. அண்மையில் (2017) சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பு (ஈ.பி.ஆர்.எல்.எவ்) விலகியிருக்கிறது. விளைவாக தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. மிஞ்சியிருக்கும் ரெலோவும் புளொட்டும் கூடப் பல்லைக் கடித்துத் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

அநேகமாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிந்த கையோடு அவையும் பிரிந்து செல்வதற்கான சூழ்நிலையே காணப்படுகின்றது. இதை இந்த அமைப்புகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த மாதிரியான முரண்கள், மோதல்களின் விளைவாக இறுதியில் மிஞ்சப் போவது தமிழரசுக் கட்சி மட்டுமே. அப்படித் தமிழரசுக் கட்சி மட்டுமே எஞ்சினால், அது கூட்டமைப்பாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தோடும் பெயரோடும் இருக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பலவீனமே இதுவாகும்.

துரதிருஷ்டவசமாகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அது உள்ளரங்கில் நெருக்கமும் பிணைப்பும் விசுவாசமும் உள்ள ஒரு அமைப்பாக இருக்கவில்லை. ஒரு தரப்பு புலிகளின் விசுவாசிகளாகவும் புலிகளுக்கு நெருக்கமாகவும் இருந்தது. இன்னொரு தரப்பு இதற்கு மாறாக இருந்தது. இடைநடுவில் ஒரு தரப்பிருந்தது. விநாயகமூர்த்தி, யோசப் பரராஜசிங்கம், மாவை சேனாதிராஜா போன்றவர்கள்.

வெளியே ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு உள்ளது என்ற தோற்றப்பாடு மட்டுமே தெரிந்தது. உள்ளுக்குள் இடைவெளிகளும் ஒவ்வாமை, ஒட்டாமைகளுமே நிலவின. ஆனால், இந்த மூன்று விதமான போக்கைப் பற்றியும் புலிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இதை உள்ளூர விரும்பினார்கள். காரணம், தாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரசியற் போராட்டத்துக்கும் போருக்கும் முன்னரணாகவும் தடை நீக்கியாகவும் மட்டும் இந்தக் கூட்டமைப்பு இருந்தாற் போதும் என்ற எண்ணம் புலிகளிடம் இருந்தது. மற்றதெல்லாவற்றையும் தாம் பார்த்துக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர்.

அதற்கப்பால் இந்தக் கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாது, எதையும் சாத்தியமாக்க இயலாது என்பது புலிகளின் நம்பிக்கையாக , எண்ணமாக இருந்தது. இருந்தாலும் புலிகளுக்கு அன்றைய நிலையில் (2002 உடனான காலப் பகுதியில்) இந்தக் கூட்டமைப்பு அவசியமாக இருந்தது. புறக்கணிக்கவோ தடுக்கவோ முடியவில்லை. ஆகவே, தமக்கு ஏற்றவகையில் கூட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டைப் புலிகள் எடுத்திருந்தனர். இதற்கு கூட்டமைப்பினுள்ளே இடைவெளிகளும் மென்னிலையிலான உள்முரண்கள் இருப்பதும் நல்லது எனப் புலிகள் எண்ணியிருந்தனர். அதனால், கூட்டமைப்பை இறுக்கமான – வலுவானதொரு கட்டமைப்பாக்குவதற்கோ அல்லது அப்படியான நிலையில் கூட்டமைப்பு உருவாகுவதற்கோ புலிகள் இடமளிக்கவில்லை.

புலிகளின் வீழ்ச்சியோடு நிலைமைகள் முற்றாகவே மாறின. அதற்கு முன்பு நடந்த ஆனந்தசங்கரியின் வெளியேற்றம் சம்பந்தனையும் அவருக்கிசைவானவர்களையும் பலமாக்கின. இறுதியில் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கம் மேலோங்கியது. கூட்டமைப்பின் அடித்தளம் சிதையத் தொடங்கியது. இந்தக் குறைபாடுகளின் திரட்சியான விளைவுகளே கூட்டமைப்பைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது அது இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது.

ஒரு அரசியற் கூட்டமைப்பு என்பது கொள்கை சார்ந்தும் அந்தக் கொள்கை கொண்டிருக்கும் இலக்கு சார்ந்துமே அமைய முடியும். அதற்கேற்பவே இயங்கவும் செயற்படவும் முடியும். இல்லையெனில் அந்தக் கட்டமைப்போ கூட்டமைப்போ நீடிக்க முடியாது. கூட்டமைப்பில் நிகழ்ந்திருக்கும் உள் நெருக்கடிகளும் உடைவுகளும் இதைத் துலக்கமாகக் காட்டுகின்றன.

உண்மையில் கூட்டமைப்பானது மேலும் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். மாபெரும் அரசியல் இயக்கமாக கூட்டமைப்புப் பரிணமித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவேயில்லை. பதிலாக அது ஒவ்வொரு காலப்பகுதியிலும் உடைந்து உடைந்து நலிவுற்றே வந்திருக்கிறது. அரசியல் ரீதியாகவும் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்தும் உறுதிப்பாட்டிலிருந்தும் மிகமிகத் தளர்ந்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை முற்றாகவே இழக்கப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கம் தன்னுடைய வெளிப்படைத் தன்மையை இழக்குமாக இருந்தால், அது வரலாற்றிலிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்படுகிறது என்றே அர்த்தமாகும். கூட்டமைப்புக்கு இன்று நேர்ந்திருக்கும் கதி இதுதான். அது சந்திக்கவுள்ள விதி இதுவே.

கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது, தமிழரசுக் கட்சியின் தவறுகளின் விளைவுகளால் சிதைக்கப்பட்டதாகவே இருக்கும். மிஞ்சப்போவது தீராப் பிரச்சினையும் தமிழரசுக் கட்சி எதிர் பிற கட்சிகள், கூட்டுகள் என்பதாகவுமே அமையும்.

கருணாகரன்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...