பெயருக்கு தடைவிதிக்கும் முயற்சியை சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தயார் | தினகரன்

பெயருக்கு தடைவிதிக்கும் முயற்சியை சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தயார்

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் செயற்பாட்டை சட்டபூர்வமாக எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பதிவுசெய்யப்படாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட முடியுமாயின், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஏன் போட்டியிட முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகவிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிடுகிறது. இந்தப் பெயரானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்ததாக இருப்பதால் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இது குறித்து யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரஸ்தாபித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் பதியப்படாத கட்சிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எம்மை மாத்திரம் கட்சியின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறுவதில் எந்த நியாயமும் இல்லை.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணைக்குழு கூறுவதானது தமிழரசுக் கட்சியை அல்லது ஆளும் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எனும் பேரில் அண்மையில் எங்களால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டமைப்பின் பெயரைப் பாவிக்கக் கூடாது என நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு தடை விதித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் இதுவரை எங்களுக்கு எழுத்துபூர்வமான அறிவித்தல் எதுவும் அனுப்பிவைக்கப்படவில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உருவாக்கத்தைக் கண்டு மிரண்டு போயுள்ள காரணத்தால் அந்தப் பெயரை நாங்கள் பயன்படுத்துவதன் மூலமாக மக்கள் மத்தியில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையாளரிடம் பொய்யான கருத்துக்களைத் தெரிவித்துத் தடை செய்யுமாறு தமிழரசுக் கட்சியினர் கேட்டிருக்கிறார்கள் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்பது தேர்தல் சட்டத்தின் எந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிவித்தால் அதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செல்வநாயகம் ரவிசாந்த் 


Add new comment

Or log in with...