குற்றமிழைப்போர் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது | தினகரன்

குற்றமிழைப்போர் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது

குற்றமிழைக்கும் எவராயினும் அவர்களுக்கு உச்ச தண்டனை வழங்குவதற்கு பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளை மக்கள் தெய்வங்களாக மதிக்கும் காலம் போய் மக்களின் வளங்களை சூறையாடி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு நாட்டையே நாசமாக்கும் அரசியல்வாதிகளையே தற்போது காண முடிகிறது என தெரிவித்த ஜனாதிபதி குற்றமிழைக்கும் எவரும் தமது நிர்வாகத்தில் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக பல மாவட்டங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படும் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை போன்ற மாவட்டங்களிலிருந்து வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு பாரிய குழாய் மூலம் நீரைக்கொண்டு வரும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலனறுவை மாவட்ட மெதிரிகிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலம் இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நேர்மை, நன்னடத்தை தொடர்பில் தாம் பொறுப்பேற்பதாகவும் மக்கள் அவர்களுக்கு நம்பிக்கையுடன் வாக்களிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன உட்பட அரசியல் பிரமுகர்கள் வேட்பாளர்களுடன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி.

அரசியல்வாதிகளின் மோசமான நடவடிக்கைகளினாலேயே நாடு நாசமாகியுள்ளது. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் ஒருவரை ஒருவர் திருடர் என்று கூறிக்கொண்டு பெரும் புரளியை உண்டுபண்ணினர். பாராளுமன்றத்தில் அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் விதத்தை முழு நாடும் பார்த்தது.

கட்சி, அரசியல், பதவி, தராதரம் என நான் பார்க்கமாட்டேன் திருடர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மக்கள் வளங்களைச் சூறையாடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பேன். அவர்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அத்தனை செயற்பாடுகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொண்டு தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

எமக்கு சிறந்த நாடு, சிறந்த கிராமங்கள் சிறந்த நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகவுள்ளது. கடந்த 30 – 40 வருடங்களாக இந்த நிலை தொடருகிறது. இந்த நிலை மாற்றப்படும்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் பயனை மக்கள் அனுபவித்து வரும் நிலையில் களுகங்கை திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வட மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட பல்வேறு மாவட்டங்களினதும் நீர்த் தேவை நிவர்த்தியடையும்.

தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு விதமாக பேசுகின்றனர். இம்முறைத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமது கிராமங்களை, பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு சிறந்த பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதே இத்தேர்தலில் மக்களின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.

(மெதிரிகிரியவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்) 


Add new comment

Or log in with...